அனைத்து தடைகளும் நீங்கி, வரும் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாகிறது சிம்பு நடித்த வாலு திரைப்படம்.
வாலு படம் நான்காண்டுகளுக்கு முன்பு நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியால் மீடியம் பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்டது. விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படம் முடிவதற்கு மூன்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
படம் தயாராகி முடிந்தாலும், வெளியிடுவது சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டது. காரணம் இந்தப் படம் மற்றும் வேட்டை மன்னன் படங்களின் மீது நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி ஏராளமான கடன் வாங்கியிருந்தாராம். அந்த கடன்கள் மற்றும் சக்கரவர்த்தியின் வேறு சில படங்களில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வாலு படத்தை வெளியிட முடியவில்லையாம்.
இதுகுறித்து ராஜேந்தர் கூறுகையில், "வாலு படம் எப்படியாவது வெளியாக வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அனைத்துக் கடன்களையும் நான் ஏற்றுக் கொண்டேன். சக்கரவர்த்தியின் சொந்தக் கடனைக் கூட நான் ஏற்றிருக்கிறேன். படத்துக்கு சம்பந்தமே இல்லாத யார் யாரோ வந்து பிரச்சினை செய்கிறார்கள்.
இன்றைய நிலவரப்படி ரூ 26 கோடி கடனை, இந்தப் படம் வெளியாக வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக நான் ஏற்றிருக்கிறேன்.
எனது இந்த சுமையை வாலு படம் போக்கிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.
Post a Comment