வாலு விவகாரம் அனுமார் வாலை விட அதிகமாகவே நீண்டு கொண்டு போகிறது.
முதலில் இந்தப் படம் சீக்கிரம் வெளிவராமல் இருக்கக் காரணமே சிம்புதான் என்று தயாரிப்பாளர் குறை கூறி வந்தார். இதோ அதோ என இழுத்தடித்த சிம்பு, ஒருவழியாக நடித்துக் கொடுத்தார். படம் வெளியாகப் போகிறது என்று எதிர்ப்பார்த்த நேரத்தில், தேதிகள் சரிப்பட்டு வரவில்லை என்று தயாரிப்பாளர் தள்ளிப் போட்டார்.
இந்த நேரத்தில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தங்களை ஏமாற்றி படத்தை வேறு நிறுவனம் மூலம் விநியோகிப்பதாகக் கூறி 6 வழக்குகளை இந்தப் படத்துக்கு எதிராகத் தொடர்ந்து இடைக்காலத் தடைப் பெற்றனர். படம் வெளியாவது குறித்த பேச்சுகள் கிட்டத்தட்ட அடங்கிவிட்டன.
இந்த நிலையில் படத்தை தானே வெளியிடுவதாகக் கூறி களத்தில் இறங்கினார் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர். இதையும் எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர்.
ஒரு வழியாக அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. படம் ரீலீசாவது குறித்த பேச்சுகள் மீண்டும் எழுந்தன. அப்போதுதான் டி ராஜேந்தர் ஒரு அவசர பிரஸ் மீட்டுக்கு அழைப்பு விடுத்தார். அவர் வீட்டிலேயே நடந்த அந்த சந்திப்பில் சிம்பு கலந்து கொள்ளவில்லை. தன் மகனுக்கு எதிராக பெரும் சதி நடப்பதாகக் குமுறித் தீர்த்தார் டிஆர். அடுத்த நாள் சிம்புவும் தன் அப்பா சொன்னதையே ட்விட்டரில் போட்டு பரபரப்பு கிளப்பினார். அப்போது தனுஷின் மாரி வெளிவரவிருந்தது. மாரி படத்துக்கு அதிக அரங்குகள் கிடைக்க தனுஷ் செய்யும் வேலையால்தான் வாலு வரவில்லை என சிம்பு ரசிகர்கள் ஒருபக்கம் கிளம்பினர்.
இந்த சம்பவம் நடந்த ஒரு மாதம் ஆன பிறகு, வரும் வெள்ளிக்கிழமையன்று வாலு வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் இப்போதும் படத்துக்கு சிக்கல். போதிய தியேட்டர் கிடைக்கவில்லையாம். காரணம் அதே தேதியில் வெளியாகவிருக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படம். இதனை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்தப் படத்துக்காக தன் கைவசம் உள்ள அரங்குகள் அனைத்தையும் ஒதுக்கியுள்ளார். உடனே சிம்புவும் அவர் ரசிகர்களும், வாலு படத்தை வெளியிடவிடாமல் உதயநிதி சதி செய்வதாக புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் ரிலீஸ் தேதி இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு அறிவிக்கப்பட்டுவிட்டது. அதை தன் வசம் உள்ள அரங்குகளில், தன் பேனரில் வெளியிடுவதாக உதயநிதியும் அறிவித்துவிட்டார். ஆனால் ரிலீஸ் தேதி எப்போது என்றே தெரியாமல், திடீர் திடீரென தேதி அறிவித்து ரத்து செய்து கொண்டிருந்த வாலு படத்தை உதயநிதி தடுப்பதாக எப்படிக் குற்றம் சாட்டலாம் என திரையுலகில் உள்ளவர்களே கடுமையாகக் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
ஒவ்வொரு முறை தன் படம் வெளியாகாமல் நிற்கும்போதும் யாரையாவது குறை சொல்வதை சிம்புவும் அவர் தந்தையும் வழக்கமாக வைத்திருப்பதாக மீடியாவில் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இன்று அவரச மீடியா சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் டி ராஜேந்தர்.
அவர் வீட்டுக்குள்ளேயே நடக்கும் இந்த சந்திப்பில் அடுத்து யாரை குற்றம் சாட்டப் போகிறார்களோ!
Post a Comment