சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த ரேவதியின் இடத்தை தமிழில் பிடிக்க கீர்த்தி சுரேஷ்க்கு எல்லா தகுதிகளும் உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவித்துள்ளது.
தமிழ் திரை உலகில் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தவர் ரேவதி. பாரதிராஜாவின் "மண்வாசனை" படத்தில் அறிமுகமாகி சிவாஜி, ரஜினி, கமல் உள்பட அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்தார். தனக்கொன்று தனி பாணியை அமைத்து அசத்திய ரேவதியின் இடத்தை நிரப்ப இதுவரை யாரும் வரவில்லை.
சமீபத்தில் வெளியான இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக தமிழ் பட உலகில் அடியெடுத்து வைத்தவர் கீர்த்தி சுரேஷ். இதையடுத்து பல தமிழ் படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள "ரஜினி முருகன்" படம் விரைவில் திரைக்கு வருகிறது. இது நல்ல பெயர் வாங்கி கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார்.
தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதில் முக்கியமான காட்சிகளில் ரேவதி போல பிரமாதமாக உணர்ச்சி மயமாக நடிக்கிறாராம். அவரது நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டு கிடைத்திருக்கிறது. இதனால் இது போன்ற அழுத்தமான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்.
முன்னாள் நாயகி மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் அடுத்து ரேவதியின் இடத்தை பிடிப்பார் என்று படக்குழுவினர் சொல்கிறார்களாம். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அவர் அந்த லட்சியத்தை நோக்கி நடைபோட தயாராகி வருகிறார்.
Post a Comment