கலாம் மறைவு நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்

|

சென்னை: இளைய சமுதாயத்தின் உந்துசக்தியாக விளங்கிய அப்துல்கலாமின் மறைவு நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

மக்கள் ஜனாதிபதியாக இந்தியர்களின் மனதில் இடம் பெற்றுள்ள அப்துல் கலாம் நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tamilnadu film directors organisation mourns for Kalam

அந்த வகையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும் கலாம் மறைவிற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் நேற்று இரவு மறைந்தார். இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உந்து சக்தியாகவும், முன் மாதிரியாகவும் திகழ்ந்தவர். இறுதி மூச்சு வரை நாட்டிற்காகவும், மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர்.

இந்திய ராணுவத்துறையில் ஏவுகணைகள் தயாரிக்கும் குழுவில் தலைவராக இருந்து பல நுண்ணிய ஏவுகணைகளை இந்தியா தயாரிக்க உதவியவர்.

இந்திய நாட்டு மக்கள் மீது மிகவும் பாசம் வைத்திருந்தவர். அதுமட்டுமல்லாமல் இளைய சமுதாயம் இந்த நாட்டை விஞ்ஞான நாடக ஆக்க வேண்டும் என்று கனவு கண்டவர். இந்திய நாடு அணுசக்தி துறையில் ஒரு வல்லரசாக ஆக வேண்டுமென்று அரும்பாடுபட்டவர்.

அப்துல் கலாம் அவர்களோடு நெருங்கி பழகுகின்ற வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. குடியரசு தலைவராக இருந்தபோது குடியரசு தலைவர் மாளிகையில் அவரை பலமுறை சந்தித்த பாக்கியம் எனக்கு கிடைத்தது. அப்போது அவர் எனக்கு பல நல்ல அறிவுரைகளை வழங்கினார்.

அவர் மிக எளிமையானவராக இருந்தார். 24 மணி நேரமும் இந்திய நாட்டு மக்களுக்காக உழைத்தவர். 120 கோடி இந்திய மக்களாலும் மதிக்கப்பட்டவர். இளைஞர்களின் வழிகாட்டி. அப்படிபட்ட தலைவர் நம்மைவிட்டு பிரிந்தது நாட்டிற்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாரின் மறைவையொட்டிஇரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று 28-07-2015தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க அலுவலகம் விடுமுறை என்று அறிவிக்கப்படுகிறது' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment