நாளை நடக்கவிருக்கும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் – லட்சுமி பிரணதி திருமணத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் பேரன் நடிகர் ஜுனியர் என்.டி.ஆர். இவருக்கும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சகோதரி மகள் லட்சுமி பிரணதிக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது.
ஆந்திர மாநிலம் மாதாப்பூரில் அமைந்துள்ள ஐடெக்ஸ் வளாகத்தில் இவர்களுடைய திருமணம் நடக்கிறது. இந்தத் திருமணத்துக்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்பட சுமார் 15 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் திருமணத்திற்காக ஐடெக்ஸ் வளாகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பிரம்மாண்டமான செட்டிங்குகளுடன் திருமண மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரபல சினிமா கலை இயக்குனர் ஆனந்து சாயி தலைமையில் இப்பணி நடைபெற்று வருகிறது. திருமண ஏற்பாடுகளுக்கான செலவு மட்டும் ரூ 18 கோடி. 300 பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றிவருகின்றனர்.
மணமக்கள் அமர உள்ள மண்டபத்தின் மீது பெரிய கலசங்களுடன் யானைகளின் உருவ சிலைகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மணமேடைக்கு இருபுறமும் சிறிய சிறிய மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான பிரபலங்கள் வருவதால், அவர்களுக்கென்று தனியாக மண்டபத்திற்கு வருவதற்காக வி.ஐ.பி. கேட் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக ஐடெக்ஸ் பின்புறமுள்ள மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்டபம் அமைக்கும் பணிகளை ஜுனியர் என்.டி.ஆர். தினமும் வந்து மேற்பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கி வருவதாக கலை இயக்குனர் ஆனந்து சாயி தெரிவித்தார்.
திருமணம் முடிந்தவுடன் நடைபெற உள்ள சிறப்பு விருந்துக்கு, விஜயவாடாவை சேர்ந்த பிரபல கேட்டரிங் நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஐடெக்ஸ் வளாகத்தில் உள்ள மூன்று மாபெரும் ஹால்கள் ஒதுக்கப்பட்டு, அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன.
Post a Comment