அப்துல் கலாமின் பாதுகாவலராக செயல்பட்ட மரியா காதலர் ஜெரோம்!

|


பெங்களூர்:  நீரஜ் குரோவர் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெரோம் மேத்யூ முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த டிவி தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் கொலை வழக்கில் எமிலி ஜெரோம் மேத்யூவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்துள்ளது. தற்போது ஜெரோம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2007-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவரிடம் இருந்து வீரப் பதக்கம் வாங்கியவர் ஜெரோம். இது தவிர அப்துல் கலாம் கொச்சிக்கு சென்றபோது அங்கிருந்த 500 கடற்படை அதிகாரிகளில் இருந்து அவரது பாதுகாப்பு அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களில் ஜெரோமும் ஒருவர்.

ஜெரோம் ஒரு கொலைகாரன் என்பது தெரிய வந்ததும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜெரோமின் நெருங்கிய பள்ளி நண்பர் ஒருவர் கூறுகையில்,

எனக்கு தெரிந்தவர்களிலேயே ஜெரோம் தான் சிறந்த லட்சியவாதி. 8-ம் வகுப்பு படிகையிலேயே ராணுவத்தில் சேரப்போவதாக கூறுவார். பின்னர் மாநில அளவில் ஸ்கேடிங் மற்றும் நீச்சல் போட்டி வீரர் ஆனார் என்றார்.

பிற நண்பர்கள் கூறியதாவது,

அவருக்கு எப்பொழுதுமே மரியா சூசைராஜ் மீது அக்கறை உண்டு. எங்கள் நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி மரியாவைப் பார்க்க மும்பை சென்றார். இது ஒன்றும் திட்டமிட்ட கொலையல்ல. ஜெரோமிற்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. மரியாவை கையும், களவுமாகப் பிடித்ததால் ஆத்திரத்தில் நீரஜ்ஜை தாக்கியுள்ளார், அவரும் இறந்துவிட்டார் என்றார்.

மரியாவும், ஜெரோமும் ஒரே பள்ளி, கல்லூரிக்குச் சென்றிருந்தாலும் அவர்கள் இருவரும் ஒரு தேவாலயத்தின் உறுப்பினர்களாக இருப்பதால் தான் அவர்களுக்கு உறவு ஏற்பட்டது. மரியா ஜெரோமை விட 2 வயது மூத்தவர். அவர்கள் கல்லூரியில் படிக்கையில் டேட்டிங் செய்யவில்லை. மரியா பையன்களை கவர்வதில் வல்லவர். அவரை கொலைகாரியாக கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்றார் மரியாவின் நண்பர்.

ஜெரோமிற்கு குறிப்பிட்ட குணாதிசயம் கொண்ட பெண்கள் தான் பிடிக்கும். அவர் மரியாவுடன் பழக ஆரம்பித்தது எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது என்றார் இன்னொரு நண்பர்.
 

Post a Comment