டிக்கெட் கட்டணத்தை சீரமைக்க திரையரங்க உரிமையாளர்கள் வேண்டுகோள்

|


சென்னை: திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை சீரமைக்க வேண்டும், என்று தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம், சென்னை அபிராமி தியேட்டரில் நேற்று காலை நடந்தது. கூட்டம் காலை 10-30 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 1 மணிவரை நடைபெற்றது. கூட்டத்துக்கு சம்மேளனத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவை இந்த பொதுக்குழு நெஞ்சார வாழ்த்தி வரவேற்கிறது. மூன்று நல்ல நிபந்தனைகளுடன், தமிழில் பெயரிடப்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு பூரண வரிவிலக்கு அளித்ததற்காக நன்றி.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, திரையரங்கங்கள் சீரோடும், சிறப்போடும் மேன்மேலும் ஓங்கி உலகதரத்துடன் வளர்வதற்கு ஏதுவாக கீழ்க்கண்ட சலுகைகள் கேட்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

* மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு, ஏர்கண்டிஷன் தியேட்டர்களுக்கு, ஏர்கண்டிஷன் அல்லாத தியேட்டர்களுக்கு அதிகபட்ச-குறைந்தபட்ச கட்டணங்களை சீரமைத்து கொடுக்க வேண்டும். சீரமைத்துக் கொடுக்கப்படும் கட்டணத்துக்கு மேல் எந்த தியேட்டரும் கட்டணத்தை உயர்த்துவதில்லை.

* தியேட்டர்களின் பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

* தியேட்டர்களின் கட்டிட உறுதிக்கேற்ப பொதுப்பணித்துறை ஐந்து வருடங்கள் வரை கட்டிட உறுதி சான்றிதழ் வழங்க அனுமதி கொடுக்க வேண்டும்.

* ஒரு நாளைக்கு காலை 9 மணி முதல் இரவு 12 மணிவரை இவ்வளவு காட்சிகள்தான் நடத்தலாம் என்ற கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஜெயகுமார், துணைத்தலைவர்கள் எம்.சுப்பிரமணியன், கே.வேணுகோபால், செயலாளர்கள் எம்.வி.ராமு, ஆர்.சத்தியசீலன், பொருளாளர் எஸ்.பி.பழனியப்பன் உள்பட 500 தியேட்டர் அதிபர்கள் கலந்துகொண்டார்கள்.
 

Post a Comment