திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லாலின் வீட்டில் இருந்து யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று கேரள சட்டமன்றத்தின் ஆளும் காங்கிரஸ் தலைமை கொறடா பிசி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன் லால் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கேரளா மட்டுமின்றி சென்னையில் உள்ள இருவரின் வீடுகளிலும் தொடர் சோதனை நடத்தப்பட்டது. இதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கு உரிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள மோகன்லாலின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொச்சி தேவரையில் உள்ள மோகன்லால் வீட்டின் பூஜை அறையில் 4 யானை தந்தங்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். வனத்துறை சட்டப்படி அனுமதியின்றி வீட்டில் தத்தங்களை வைத்திருந்தால் அவர்களை உடனே கைது செய்ய வேண்டும். ஆனால் மோகன்லாலை இதுவரை கைது செய்யவில்லை.
இந்நிலையில் கேரள அரசு தலைமை கொறடா பி.சி. ஜார்ஜ் கொச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வீட்டில் தத்தங்களை பதுக்கி வைத்திருந்த மோகன்லாலை இதுவரை கைது செய்யாதது தவறு. சட்டத்தில் அனைவரும் சமம். எனவே மோகன்லாலை உடனே கைது செய்ய வேண்டும் என்றார்.
Post a Comment