பைவ் ஸ்டார் ஓட்டல்ல ரூம் போடாம ஜெயிச்ச வசனகர்த்தா ஆரூர்தாஸ் - எஸ்பி முத்துராமன்

|

The Secret Aarurdass S Success

சென்னை: 5 நட்சத்திர ஓட்டலில் 'ரூம்' போடாமல், வெற்றிகரமான வனகர்த்தாவாக ஜொலித்தவர் ஆரூர்தாஸ் என பாராட்டினார் இயக்குநர் எஸ்பி முத்துராமன்.

பழம்பெரும் திரைப்பட கதை-வசனகர்த்தா ஆரூர்தாஸ், 1,000 படங்களுக்கு மேல் கதை-வசனம் எழுதியவர்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகிய இரண்டு பேரின் படங்களுக்கும் ஒரேநேரத்தில் வசனம் எழுதியவர். இவருடைய 60 ஆண்டு கால சினிமா அனுபவங்களை தொகுத்து, 'கோடம்பாக்கத்தில் அறுபது ஆண்டுகள்' என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார்.

இந்த புத்தக வெளியீட்டு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சிவகாமி பெத்தாச்சி கலையரங்கில் நேற்று மாலை நடந்தது.

தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் சார்பில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் புத்தகத்தை வெளியிட, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயலாளர் சச்சு பெற்றுக்கொண்டார்.

விழாவில், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் பேசியதாவது:

"ஆரூர்தாஸ் கதை-வசனம் எழுதுவதற்காக, 5 நட்சத்திர ஓட்டலில் 'ரூம்' போட சொல்ல மாட்டார். வெளிநாடுகளுக்கு போயும் எழுத மாட்டார்.

சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில், பதினைந்துக்கு பத்து பரப்பளவுள்ள ஒரு எளிமையான அறையில்தான் கதை-வசனம் எழுதுவார். அங்கு ஏர்கண்டிஷன் கிடையாது. இயற்கையான காற்றுதான்.

அவர் ஒரு அசைவப் பிரியர். எந்தெந்த உணவு எந்தெந்த ஓட்டலில் ருசியாக இருக்கும்? என்பதை தெரிந்து கொண்டு சாப்பாடு வாங்கி வர சொல்வார்.

அதிகாலை 4 மணிக்கு...

முக்கிய காட்சிகளுக்கு, அதிகாலை 4 மணிக்கே எழுந்து வசனம் எழுதுவார். அவர் வசனத்துக்காக பெயரும், புகழும் வாங்கியது இப்படித்தான். ஒரே வாரத்தில், முழு படத்துக்கும் வசனம் எழுதி விடுவார்,'' என்றார்.

விழாவுக்கு, நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை தாங்கினார். இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி, கவிஞர்கள் முத்துலிங்கம், பிறைசூடன், வசனகர்த்தா வியட்நாம் வீடு சுந்தரம், நடிகைகள் எம்.என்.ராஜம், சச்சு, பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரும் பேசினார்கள்.

ஆரூர்தாஸ் நன்றி கூறினார்.

 

Post a Comment