பாலிவுட்டின் பழம்பெரும் சினிமா படைப்பாளர் யாஷ் சோப்ரா ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 80.
ஏராளமான வெள்ளிவிழா திரைக் காவியங்கள் படைத்தவர் என்பதால் 'காதல் மன்னன்' என்று வர்ணிக்கப்பட்டவர் யாஷ் சோப்ரா.
அண்மையில் டெங்கு காய்ச்சல் காரணமாக மும்பை மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட யாஷ் சோப்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், உடல் உறுப்புகள் பலவும் செயல் இழந்ததன் காரணமாக அவர் மரணம் அடைந்தார்.
தூல் கா பூல் (1959) தொடங்கி தில் தோ பாகல் ஹை (1997) வரை அவர் பல பொன்விழா, வெள்ளிவிழா படங்களைத் தந்தார். த்ரிஷூல், சில்சிலா, தீவார் என காலத்தை வென்ற காதல் காவியங்கள் தந்தார்.
ஏழு ஆண்டு இடைவெளிவிட்டு வீர் ஜாரா (2004) என்ற ப்ளாக்பஸ்டரைக் கொடுத்தவர் யாஷ் சோப்ரா.
ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா, கத்ரீனாவை வைத்து ஜப் தக் ஹை ஜான் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.
ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றிக் கொடி நாட்டினார் யாஷ் சோப்ரா. தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, தாக், ஏக் தா டைகர் உள்பட 50 படங்களுக்கும்மேல் தனது யாஷ் ராஜ் பிலிம்ஸ் பேனரில் தயாரித்தார்.
ஜப் தக் ஹை ஜான் படத்தோடு, சினிமாவிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்தார் யாஷ் சோப்ரா.
தன் படைப்பாற்றலால் பல தலைமுறைகளுக்கு சிறந்த பொழுதுபோக்கை அளித்தவர் யாஷ் சோப்ரா என பிரதமர் மன்மோகன் சிங் தன் இரங்கல் குறிப்பில் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகமும் யாஷ் சோப்ரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
Post a Comment