சென்னை: விஸ்வரூபம் படத்தைத் திரையிடுவதைத் தடை செய்து உத்தரவு பிறப்பிக்க எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. எனவே படத்தைத் தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் விஸ்வரூபம் படத்தைத் திரையிடுவதற்கு தடை ஏதும் இல்லை.
விஸ்வரூபம் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி ரீஜென்ட் சாய் மீரா என்ற நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டது. அதில், கமல்ஹாசன் நடித்த மர்மயோகி திரைப்படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தக்கு, கமல் 10.50 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதுவரை விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்குக்குக் கமல்ஹாசன் சார்பி்ல தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அவரது தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் படத்தைத் திரையிடுவதைத் தடை செய்தால் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், படத்துக்கு தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
இதன் மூலம் விஸ்வரூபம் படத்தைத் திரையிட தடை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி உலகெங்கும் விஸ்வரூபம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment