சென்னை: கமலுடன் திரையரங்க உரிமையாளர்கள் நேற்றி இரவிலிருந்து விடிய விடிய நடத்திய பேச்சில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து விஸ்வரூபம் டிடிஎச்சில் வெளியாவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டிடிஎச்சில் வெளியாவதால் வட இந்தியாவில் விஸ்வரூபத்துக்கு ஒரு தியேட்டர் கூட ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை தன்வசம் வைத்திருக்கும் பிவிஆர் சினிமாஸ் குழுமம் கமலுக்கு வெளிப்படையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் இரு வாரங்களுக்குப் பின்பே வெளியிட வேண்டிய சூழல். தமிழகத்திலும் சுமூக நிலை இல்லை. 45 திரையரங்குகள்தான் படத்தை வெளியிட முன்வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்களுடன் நேற்றிலிருந்து விடிய விடிய கமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இந்த பேச்சில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிகிறது. முடிவில் டிடிஎச்சில் படத்தை முதலில் வெளியிடும் தன் முடிவை கமல் கைவிட சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.
டிடிஎச் மூலம் ஒளிபரப்புவதில், கமல் எதிர்ப்பார்த்த அளவு முன்பதிவு ஆகவில்லை என்பதும் இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த விரிவான செய்தி இன்று பிற்பகலுக்குள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Post a Comment