பதின்ம வயதுகளில் எத்தனையோ விசயங்களை கற்றுக்கொண்டிருப்போம். ஒருவிதமான புதிரான வயது அது. அந்த நேரத்தில் சரியான வழிகாட்டுதல் இருந்தால் வாழ்க்கையில் அனைவராலும் ஜெயிக்க முடியும். அப்படிப்பட்ட 14 வயதில் பகுத்தறிவுப் பாதைக்குச் சென்றதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சன் மியூசிக் சேனலில் இந்த வாரம் சனி, ஞாயிறு இரவு கோலிவுட் டயரி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தனது டயரி பக்கங்களை புரட்டிப் பார்த்தார்.
சிறுவயதில் தான் படித்த போது செய்த சேட்டைகள். பள்ளியில் விழுந்து அடிபட்டது. படிப்பில் ஆர்வமில்லாமல் நடனம் கற்றுக்கொண்டது என சுவாரஸ்யமாக சொல்லிக் கொண்டு வந்தார்.
ஏழு முதல் 14 வயதுவரை தன் வாழ்க்கையில் நடந்ந விசயங்களை கூறிய கமல், பெருந்தலைவர் காமராஜர் வீட்டிற்கு தன்னுடைய அப்பா அழைத்துச் சென்றபோது, அவர் செல்லமாக தன்னை ‘கூத்தாடி' என்று கூப்பிடுவதை நினைவு கூர்ந்தார். காமராஜரின் வாக்கு இன்றைக்கு வரைக்கும் பலித்துக் கொண்டிருக்கிறது என்றார்.
தன்னுடைய 14 வயதில்தான் ஆன்மீகப் பாதையில் இருந்து பகுத்தறிவுப் பாதைக்கு மாறும் சம்பவம் நடைபெற்றது என்று கூறினார். தந்தைப் பெரியாரின் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்ற நண்பர்கள் மூலம் தன் வாழ்க்கைப் பயணம் வேறு பக்கம் திரும்பியது என்றார்.
தன்னுடைய 16 வயதில் அப்பாவிடம் போய் எப்போ எனக்கு கல்யாணம் செய்து வைக்கப் போறீங்க என்று கேட்டதாகவும், அதற்கு அவர் ஆச்சரியப்பட்டதாகவும் கூறிய கமல், பேசாமல் கல்யாணம் ஆகாமலேயே இருந்திருக்கலாம் என்றார்.
ரோட்டோரத்தில் நின்று சைட் அடிப்பது பிடிக்காது என்று கூறிய கமல் காதல் என்ற உணர்வு நம்மை தாக்கும் போது நமக்கானவரை நாம் சைட் அடிக்கலாம் என்றார்.
சிறுவயது முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன் வாழ்க்கையில் நடந்த விசயங்களை சுவாரஸ்யமாக தெரிவித்த கமல் ஹாசனை பேட்டி கட்ட தொகுப்பாளினிக்குதான் சுவாரஸ்யமாக கேள்விகளைக் கேட்கத் தெரியவில்லை.
நடனம் பயின்று வெளிமாநிலங்களுக்கு நடனமாடப் போனபோது கால் ஒடிந்த கதையை கமல் கூறும் போது எந்த வித எக்ஸ்ப்ரசனும் அந்த தொகுப்பாளினியிடம் வெளிப்படவில்லை. அனைத்து சம்பவத்திற்கும் அவர் ஒகே என்று மட்டுமே கூறிக்கொண்டிருந்தது நிகழ்ச்சிக்கு திருஸ்டி பரிகாரமாக இருந்தது என்றே கூறவேண்டும்.
Post a Comment