சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் மட்டும் 60 தியேட்டர்களில் அமீரின் ஆதி பகவன் வெளியாகிறது.
அமீர் இயக்க, ஜெயம் ரவி - நீத்து சந்திரா நடிப்பில், திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் தயாரிப்பில் கடந்த இரண்டாண்டுகளாக உருவாகி வந்த படம் ஆதிபகவன்.
அதிரடி ஆக்ஷன் கமர்ஷியல் படமாக இதனை உருவாக்கியுள்ளார் அமீர். அவர் இயக்கிய கடைசி வெற்றிப் படம் பருத்திவீரன்தான் என்பதால், அதை மிஞ்சும் வகையில் இந்தப் படத்தை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வந்தார். ஆனால் இடையில் திரையுலக அரசியல், பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடிக்கப் போய் வந்தது என பல சிக்கல்களால் படம் தடைப்பட்டது.
இதில் ஜெயம் ரவிக்கும் அமீருக்கும்கூட மனஸ்தாபம் ஏற்பட்டு, ஆடியோ வெளியீட்டு விழாவில் பகிரங்கமாக வெடித்தது.
இப்போது வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது ஆதிபகவன். இம்மாத இறுதியில் 22-ம் தேதி ஆதிபகவன் வெளியாகிறது.
இந்தப் படத்துக்கு போட்டி போட்டுக் கொண்டு தியேட்டர்கள் அளித்துள்ளனர். சென்னை நகரில் மட்டுமே 40 அரங்குகளும் புறநகர்களில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகளும் அமீர் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இப்போது விஸ்வரூபம் வெளியாகியுள்ள பெரும்பாலான அரங்குகளில் அடுத்து வெளியாகவிருப்பது ஆதிபகவன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் முதல் முறையாக ரஜினி, கமல், விஜய் அல்லாதவர்களின் படம் ஒன்றுக்கு இத்தனை அரங்குகளை ஒதுக்கியிருக்கிறார்கள். இது அமீர் என்ற படைப்பாளிக்குக் கிடைத்த மரியாதையாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 400 அரங்குகளுக்கும் மேல் ஆதி பகவன் வெளியாகிறது.
Post a Comment