சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஒரு படத்தில் நடிக்கக் கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரடி இந்திப் படத்தில் நடித்து பல ஆண்டுகள் ஆகின்றன. புலந்தி என்ற படத்தில் அவர் கடைசியாக நடித்தார். அதன் பிறகு ஷாரூக்கானின் ரா ஒன் படத்தில் ஒரு நிமிடக் காட்சியில் தோன்றினார். இதனால் அவரது தமிழ்ப் படங்களை டப் செய்து இந்தியில் வெளியிட்டு வருகின்றனர்.
சிவாஜி, எந்திரன் போன்றவை இந்திப் படங்களுக்கு நிகரான வெற்றியை பாலிவுட்டில் ஈட்டின.
ராணா படத்தை அவர் நேரடியாக இந்தியிலும் உருவாக்க முயன்றார். ஆனால் உடல்நிலை பாதிப்பு அவரது முயற்சியில் தடங்கலாக அமைந்தது. இப்போது அவர் நடித்துவரும் மோஷன் கேப்சரிங் அனிமேஷன் படமான கோச்சடையானை நேரடியாக இந்தியில் வெளியிடுகிறார்.
இந்த நிலையில் ராணா படத்தை இயக்கவிருந்த கேஎஸ் ரவிக்குமார், இப்போது சஞ்சய் தத்தை வைத்து போலீஸ் கிரி என்ற படத்தை இயக்கி வருகிறார். இது தமிழில் வெளியான சாமி படத்தின் ரீமேக் ஆகும்.
இந்தப் படம் முடிந்ததும், மேலும் ஒரு இந்திப் படத்தை இயக்குகிறாராம் கேஎஸ் ரவிக்குமார். இந்தப் படத்தில் ரஜினி நடிக்கிறார் என்றும் அவருடன் சஞ்சய் தத்தும் நடிப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை டிபி அகர்வால் தயாரிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "போலீஸ் கிரி படம் முடிந்ததும் ஒரு மெகா பட்ஜெட் படம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதில் சூப்பர் ஸ்டாரிடம் நடிக்க பேசியுள்ளோம்.
அவருடன் சஞ்சய் தத்தும் நடிப்பார். இருவருக்கும் பொருத்தமான கதை ஒன்றை உருவாக்கி வருகிறார் கேஎஸ் ரவிக்குமார். இந்தப் படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
வட இந்திய நாளிதழ்கள் இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்டவை இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. ஆனால் இது எந்த அளவு உண்மை என்பது ரஜினி தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.
Post a Comment