விஸ்வரூபம் குறித்து காமிக்ஸ் செய்தி... என்டிடிவி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

|

Tn Govt Sues Ndtv Viswaroopam News

சென்னை: விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து அவதூறு வழக்குகளைத் தாக்கல் செய்ய ஆரம்பித்துள்ளது தமிழக அரசு. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைத் தொடர்ந்து தற்போது என்டிடிவி நிறுவனம் மீது அவதூறு வழக்குப் பாய்ந்துள்ளது.

விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூகப் பிரபலங்கள், மீ்டியாக்களைச் சேர்ந்தவர்கள், அமைப்புகளின் தலைவர்கள், சட்ட நிபுணர்கள் என பல தரப்பினரும் குரல் கொடுத்தனர். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா, செய்தியாளர்களை அழைத்து விளக்கம் அளித்தார்.

அப்போது விஸ்வரூபம் படம் தொடர்பாக அரசு மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியோர் மீது வழக்குத் தொடரப்படும் என்று அவர் கூறியிருந்தார். அதன்படி தற்போது வழக்குகள் பாயத் தொடங்கியுள்ளன.

சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில் தற்போது என்டிடிவி நிறுவனம் மீது வழக்கு பாய்ந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் வழக்கறிஞர் ஜெகன் சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு...

ஜனவரி 31ம் தேதி என்டிடிவியில் விஸ்வரூபம் தடை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான செய்தி, காமிக்ஸ் முறையில் ஒளிபரப்பப்பட்டது. அதில், நடிகர் கமலஹாசன், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டயலாக் பேசுவதுபோல் கருத்து வெளியிடப்பட்டது.

இந்த செய்தி தமிழக முதல்வரின் நற்பெயருக்கும், தமிழக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் வகையில் உள்ளது.

சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய விளக்கம் எதுவும் கேட்காமல் மக்களிடம் முதல்வருக்கு உள்ள மரியாதையை கெடுக்கும் வகையில் செய்தியை வெளியிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் காஷிஸ் குப்தா, என்டிடிவி தலைவர் பிரணாய் ராய், தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் சந்திரா, செயல் துணைத் தலைவர் கே.வி.எல்.நாராயண ராவ் ஆகியோர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500ன் கீழ் தண்டனைக்கு உரியவர்களாவார்கள்.

எனவே, அவர்கள் மீது அவதூறு சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Post a Comment