இளையராஜா என்னை விமர்சித்ததற்கு பதில் கூற விரும்பவில்லை என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இளையராஜா - பாரதிராஜா இருவரும் தங்கள் திரை வாழ்க்கையை ஒன்றாகத் துவங்கியவர்கள். சினிமாவுக்கு வரும் முன்பே இளம் பிராயத்திலேயே நண்பர்களாக இருந்தவர்கள்.
இருவரும் இணைந்து படைத்த படங்கள் இசைக் காவியங்களாகத் திகழ்கின்றன. வணிக வெற்றிகளுக்கும், காலங்களுக்கும் அப்பால் நிற்கும் படங்கள் அவை.
கடந்த சில ஆண்டுகளாக இருவரும் இணைந்து படங்கள் செய்யாமல் போனாலும், மேடைகளில் நட்பு பாராட்டி வந்தனர்.
ஆனால் இருவருக்கும் இப்போது பெரும் உரசல் ஏற்பட்டுள்ளது. அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா, மிக உரிமையாய் இளையராஜாவி விமர்சனம் செய்தார்.
அது இளையராஜாவை மிகவும் காயப்படுத்திவிட்டது. இந்த வருத்தத்தை அவர் குமுதம் பத்திரிகையில் தான் எழுதும் கேள்வி பதில் பகுதியில் வார்த்தைகளில் வெடித்திருந்தார்.
என்னிடம் தனியாகச் சொல்ல வேண்டியதை மேடையில் சொல்லி அவமானப்படுத்திவிட்டார் பாரதிராஜா. அதை ஒரு பைத்தியக்காரனின் பேச்சாக எடுத்துக் கொள்கிறேன், என்றெல்லாம் எழுதியிருந்தார்.
தமிழ் சினிமா உலகில் இது பரபரப்பாக பேசப்படும் விஷயமாகிவிட்டது.
இந்த நிலையில், பாரதிராஜாவிடம் இளையராஜாவின் வருத்தம் மற்றும் கோபம் குறித்து கேட்டபோது, "இதற்கு என்னிடம் பதில் இல்லை. சொல்லவும் விரும்பவில்லை. நாங்கள் அரசியல் கட்சியா நடத்துகிறோம்... பதிலுக்கு பதில் அறிக்கைவிட... விடுங்கள்," என்றார்.
Post a Comment