அலுவலகத்தில் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது ரூ 5 கோடி கேட்டு மணிரத்னம் வழக்கு!

|

Manirathnam Suhasini Sues On Mannan

சென்னை: கடல் பட விநியோகத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் நஷ்ட ஈடு கேட்டு தன் அலுவலகத்துக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்த மன்னன் பிலிம்ஸ் உரிமையாளர்கள் மீது ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார் மணிரத்னம்.

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தை விநியோகித்ததன் மூலம் தங்களுக்கு ரூ 17 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மன்னன் பிலிம்ஸ் சார்பில் தெரிவித்தனர். இந்த நஷ்டத்தை மணிரத்னம்தான் ஈடுகட்ட வேண்டும்.. அவர் படம் என்பதால்தான் வாங்ககி வெளியிட்டோம் என்று கோரி, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மணிரத்னம் மீது புகார் கொடுத்தனர்.

ஆனால் மணிரத்னமோ, கடல் படத்தை ஜெமினி நிறுவனத்துக்கு நாங்கள் விற்றுவிட்டோம். எனவே எனக்கும் அந்தப் பட வியாபாரத்துக்கும் சம்பந்தமில்லை. எதுவாக இருந்தாலும் ஜெமினி நிறுவனத்திடம்தான் பேச வேண்டும் என அறிக்கைவிடுத்தார்.

இது மிகப் பெரிய மோசடி என்று மன்னன் பிலிம்ஸ் உள்ளிட்டோர் மீண்டும் நஷ்ட ஈடு கோரி வந்தனர்.

இந்த நிலையில் மெட்ராஸ் டாக்கீஸ் உரிமையாளர்களான மணிரத்னம், அவர் மனைவி சுகாசினி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், "மன்னன் பிலிம்ஸ்காரர்கள் எங்களுக்கு யாரென்றே தெரியாது. ஆனால் அவர்கள் அலுவலகத்துக்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்தியதால் எங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. சமூகத்திலும் திரைத்துறையிலும் எங்களுக்கு இருந்த நல்ல பெயருக்கு களங்கம் உண்டாகிவிட்டது. திட்டமிட்டு, பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி இதனை மேற்கொண்ட மன்னன் மீது சட்ட நடவடிக்கை வேண்டும். எங்களுக்கு இழப்பீடாக ரூ 5 கோடியை தர வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

மணிரத்னம், சுகாசினி சார்பில் அவர்கள் வழக்கறிஞர் அபுடு குமார் இதனை தாக்கல் செய்தார். வழக்கை ஏற்று சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடல் படத்தில் ரூ 17 கோடி நஷ்டம் என்று போராடியவர்களிடமே, ரூ 5 கோடியை மணிரத்னமும் அவர் மனைவி சுகாசினியும் கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Post a Comment