திகில் படம் காந்தாரியில் பவர் ஸ்டார் சீனிவாசன்!

|

Power Star Srinivasan Kanthari

காந்தாரி எனும் புதிய திகில் படத்தில் நடிக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

ஓரியண்டல் பிக்சர்ஸ் மற்றும் ஜீரோ ரூல்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் படம் இது.

இதில் கதாநாயகனாக சாட்டை, கீரிபுள்ள, சொகுசு பேருந்து நிலையம் ஆகிய படங்களில் நடித்திருக்கும் யுவன், கதாநாயகியாக மும்பை வரவு புதுமுகம் இஷா, இன்னொரு நாயகியாக பிரிதிக்ஷா மைதிலி ஆகியோர் அறிமுகமாகிறார்கள்.

இவர்களுடன் நாசர், சந்தானபாரதி, காதல் தண்டபாணி, கலாபவன் மணி, வடிவுக்கரசி என பெரிய பட்டாளமே நடிக்கிறது.

இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு வழக்கம்போல ஒரு ஐட்டம் பாட்டும் உண்டு.

குடும்பமே தற்கொலை செய்துகொண்ட ஒரு வீடு. அங்கே யாருமே குடிவராத நிலையில் காதலர்கள் இருவர் எதிர்த்தவர்களிடம் இருந்து தப்பித்து இந்த வீட்டில் தஞ்சம் அடைகின்றனர். இறந்தவர்களில் காந்தாரி என்ற இளம்பெண், தன் குடும்பம் அழிவதற்குக் காரணமானவர்களைப் பழிவாங்க உடல் தேடி அலையும் போது கதாநாயகன் மாட்டிக்கொள்ள, அவன் உடம்பில் ஏறிக் கொள்கிறது காந்தாரி ஆவி.

காதலனின் உடம்பில் இருந்து காந்தாரி வெளியேறினாளா..? காதல் கைகூடியதா ..? என்பது தான் கதை.

இப்படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் எம்கே குமார். விஜய் ஆனந்த் இசையமைக்க மொத்தம் 4 பாடல்கள் படத்தில் இடம்பெறுகின்றன.

படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி காரைக்குடியில் முடிவடைகிறது.

 

Post a Comment