ரஜினி சாரை விட 100 மடங்கு எளிமையானவர் அவர் மகள் ஐஸ்வர்யா என்று தன் மனைவியைப் பற்றி கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.
வெளியில் அதிகமாகப் பேசுவதைத் தவிர்க்கும் தனுஷ், முதல் முறையாக மிக நீண்ட பேட்டியை அளித்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் தனிப்பட்ட விஷயங்களைக் கூட அதில் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் தனுஷ்.
தனது மனைவி ஐஸ்வர்யா பற்றி அவர் கூறுகையில், "காதல் கொண்டேன் படத்தின் ப்ரிமியர் ஷோவின்போதுதான் ஐஸ்வர்யாவைச் சந்தித்தேன். இடைவேளையின் போது ஒருவருக்கொருவர் ஹாய் சொல்லிக் கொண்டோம். பின்னர் தியேட்டர் உரிமையாளர் என்னை ஐஸ்வர்யாவுக்கும் சௌந்தர்யாவுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் ஒரு நாள் ஐஸ்வர்யா எனக்கு ஒரு வாழ்த்தும் பூச்செண்டும் அனுப்பி வைத்திருந்தார். தொடர்பில் இருங்கள் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். நான் அதை சீரியஸாக எடுத்துக் கொண்டேன். இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த தொடர்பு எங்கள் திருமணத்தில் முடிந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக மட்டும் நான் ஐஸ்வர்யாவைப் பார்க்கவில்லை. அவரது எளிமை எனக்குப் பிடிக்கும். நீங்கள் அவரது தந்தை (ரஜினி) எளிமையானவர் என்று நினைத்தால், ஐஸ்வர்யாவை ஒரு முறை சந்தியுங்கள். அவர் ரஜினி சாரைவிட 100 மடங்கு எளிமையானவர் என்பது புரியும். எல்லோரையும் அவர் ஒரே மாதிரி நடத்துவார். எளிதில் நட்பாகிவிடுவார். அதேபோல அவரது சிக்கலான மனநிலையும் எனக்குப் பிடிக்கும். என் மகன்களுக்கு அவர் அருமையான தாய். மிகச் சிறப்பாக அவர்களை வளர்த்து வருகிறார்," என்றார்.
Post a Comment