கொச்சி: நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்த நடிகைக்கு இடுப்பு எலும்பு முறிந்தது.
‘புட்டி' என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர், சுவர்ணா தாமஸ். ‘பிரணயகதா,' ‘பிளாட்' உள்பட சில மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். 2 தமிழ் படங்களிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார்.
‘புட்டி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சுவர்ணா கொச்சி வந்தார். அங்குள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 4-வது மாடியில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். அங்கிருந்து தினமும் படப்பிடிப்புக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் அவர், 4 - வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து நேற்று கீழே விழுந்தார். அதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவருடைய முதுகு எலும்பும், இடுப்பு எலும்பும் முறிந்தது. உடனடியாக அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சுவர்ணாவுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டு, பால்கனியில் இருந்து கீழே விழுந்து விட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
Post a Comment