சென்னை: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான பெப்சி உமா கொடுத்த புகாரின் பேரில் ஜெயா டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்கர் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சன் டிவியில் பிரபலமான பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் உமா. 15 ஆண்டுகாலமாக இந்த நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கியதால் உமாமகேஸ்வரி என்ற அவர் பெப்சி உமா என்றே அழைக்கப்பட்டார். சில ஆண்டுகளாக தொலைக்காட்சியை விட்டு ஒதுங்கியிருந்த அவர் தற்போது ஜெயா டிவியில் ஆல்பம் என்ற நிகழ்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் கிண்டி மகளிர் காவல்நிலையத்தில் பெப்சி உமா நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்கர நாகராஜ் தம்மை பலரது முன்னிலையில் தகாத வார்த்தையில் திட்டி அவமானப்படுத்தி உள்ளார். இது பற்றி ஜெயா டிவி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சங்கர நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கிண்டி மகளிர் போலீசார் சங்கர நாகராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
Post a Comment