வடிவேலு நடிக்கவிருந்த கதை, கடைசியில் விஜய்க்குப் போனது! - கரு பழனியப்பன் ப்ளாஷ்பேக்

|

வடிவேலு நடிக்கவிருந்த கதை, கடைசியில் விஜய்க்குப் போனது! - கரு பழனியப்பன் ப்ளாஷ்பேக்

சென்னை: விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் வடிவேலுதான். அப்புறம்தான் அதில் விஜய் வந்தார், என்று ரகசியத்தை உடைத்தார் இயக்குநர் கரு பழனியப்பன்.

துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், மனம் கொத்திப் பறவை உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் தந்த இயக்குநர் எழில் இயக்கும் படம் தேசிங்குராஜா.

இதுவரை தான் இயக்கிய படங்களிலேயே மிகப் பிடித்த படம் என்று எழிலே சொல்லும் அளவுக்கு சிறப்பாக வந்துள்ளதாம் இந்தப் படம்.

இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் எழில் பற்றி அவருடன் பணியாற்றிய இன்னொரு இயக்குநரான கரு.பழனியப்பன் பேசினார்.

தனது பேச்சில், "எத்தனை வெற்றிகள் வந்தாலும் அலட்டிக் கொள்ளாத மனிதர் எழில். துள்ளாத மனமும் துள்ளும் கதையை பல ஹீரோக்களிடம் சொல்லி கால்ஷீட் கேட்டுக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் அப்போதைய வடிவேலு வரை இந்தக் கதையில் நடிக்கக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

கதையை கேட்ட வடிவேலு, 'இது ரொம்ப நல்ல கதை. ஆனா இந்த நல்ல கதையில் நான் நடிக்கணுமா. நல்லா யோசிச்சு பாருங்க. ஒரு நல்ல கதைல நான் நடிச்சு வீணடிக்க விரும்பல. 6 மாசம் காத்திருந்து அப்பறம் வாங்க, அப்பவும் உஙளுக்கு இதே மனநிலை இருந்தா நான் நடிச்சு குடுக்குறேன்,' என்று கூறினார்.

அதன்பிறகு சூப்பர்குட் ஃபிலிம்ஸ் படத்தைத் தயாரிக்க முன்வந்தது. விஜய் கால்ஷீட் தந்தார். இல்லாவிட்டால் வடிவேலுதான் நடித்திருப்பார். வடிவேலு நடித்திருந்தால் இந்த திரைப்படத்தில் விஜய் நடித்திருக்க முடியாது," என்றார்.

தேசிங்கு ராஜா படத்தில் விமல் நாயகனாகவும், சூரி அவருக்கு தமாஷ் வில்லனாகவும் நடித்துள்ளனர். பிந்து மாதவி, சிங்கம் புலி, ரவி மரியா உள்பட பலர் நடித்துள்ளனர்.

 

Post a Comment