சென்னை: புறம்போக்கு தலைப்பு எனக்குத்தான் சொந்தம். அதை நான் முன்பே பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்று ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நட்ராஜ் சுப்ரமணியம், கோலிவுட்டில், பாலிவுட்டில் பிரபலமான ஒளிப்பதிவாளர். சமீபத்தில் வெளிவந்த தனுஷின் அமராவதி (ராஞ்சன்னா) படத்திற்கும் அவர்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தமிழில் நாளை, சக்கர வியூகம், மிளகா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஆர்யா, விஜய் சேதுபதியை வைத்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கப்போகும் அடுத்த படத்தின் பெயர் புறம்போக்கு என்பதைக் கேள்விப்பட்ட நட்ராஜ், இது தன்னுடைய தலைப்பு எனத் தெரிவித்துள்ளார்.
தனது நட்ராஜ் சினி ஆர்ட்ஸ் சார்பாக தாம் கதாநாயகனாக நடிக்க நெத்திலி மற்றும் புறம்போக்கு ஆகிய தலைப்புகளைப் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், தயாரிப்பாளர் சங்கத்திலும், கில்டிலும் இந்தத் தலைப்புகள் தன் பெயரில்தான் உள்ளன என்றும் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
புதுப்பிப்பதற்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், யூடிவி -டிஸ்னி நிறுவனம் இந்த புறம்போக்கு தலைப்பை அறிவித்திருப்பதாகவும், புறம்போக்கு என்னுடைய தலைப்பாக முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதால் மதிப்பிற்குரிய இயக்குனர் ஜனநாதன் அவர்கள் வேறு தலைப்பை தேர்வு செய்யும்படி கேட்டுக்கொள்வதாகவும் நட்ராஜ் தெரிவித்தார்.
Post a Comment