சென்னை: திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் மகன், காலமான கைலாசத்தின் உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைலாசம் நேற்று பிற்பகல் மரணமடைந்தார்.
கைலாசத்திற்கு கீதா என்ற மனைவியும், விலாசினி என்ற மகளும், விஷ்ணு என்ற மகனும் உள்ளனர். சென்னை வாரன் சாலை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கைலாசத்தின் உடலுக்கு திரையுலகினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கைலாசத்தின் உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று பிற்பகலில் தகனம் செய்யப்பட்டது. கைலாசத்தின் உடலுக்கு அவரது மகன் விஷ்ணு இறுதிச் சடங்குகள் செய்தார். அப்போது பாலசந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
மறைந்த கைலாசம், கவிதாலயா திரைப்பட நிறுவனத்தையும், மின் பிம்பங்கள் என்ற தொலைக்காட்சி தொடர் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். மேலும், தூர்தர்ஷனில் பணியாற்றிய போதே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளை புகுத்தினார். சமூக அவலங்களை தொடர்ந்து சாடி வந்த அவர், ஆவணப்பட இயக்குநராகவும் திகழ்ந்தார். அவர் இயக்கிய வாஸ்து மரபு என்ற ஆவணப்படம் தேசிய விருது பெற்றது.
Post a Comment