சென்னை: மூத்த இயக்குநர் கே பாலச்சந்தரின் மகன் கைலாசம் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 53.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாலச்சந்தர். இவரது மகன் கைலாசம். பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த பல படங்களில் தயாரிப்பாளராக இருந்துள்ளார்.
மின் பிம்பங்கள் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். தொலைக்காட்சிகளுக்கு நிகழ்ச்சிகள் தயாரித்துக் கொடுப்பதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்தது மின்பிம்பங்கள்.
காச நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார் கைலாசம். அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் இன்று பிற்பகல் 1.40 மணிக்கு அவர் மரணமடைந்தார்.
கைலாசத்துக்கு கீதா என்ற மனைவியும், விலாசினி என்ற மகளும், விஷ்ணு பாலா என்ற மகனும் உள்ளனர். தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி இவரது சகோதரி.
கைலாசத்தின் இறுதிச் சடங்குகள் நாளை நடக்கிறது. சென்னை வாரன் சாலையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து கைலாசத்தின் இறுதி ஊர்வலம் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி இரங்கல்
கைலாசம் மரணத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார், லிங்கா படப்பிடிப்பிலிருக்கும் ரஜினிகாந்த். அவர் நேரில் வந்து கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Post a Comment