மும்பை: நடிகை ரியாசென்னின் மும்பை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், அவர் நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
முன்னாள் இந்திப்பட நடிகை மூன்மூன் சென். இவரது மகள் ரியாசென். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால், தமிழில் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை. தற்போது இந்தியில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக ரியாசென் உள்ளார்.
ரியாசென் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாய் மூன்மூன்சென்னுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு தனது தாயுடன் ரீமாசென் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவர்களது வீட்டில் தீப்பிடித்தது. கட்டில், மெத்தை, மரச்சாமான்கள் தீயில் கொழுந்து விட்டு எரியத் தொடங்கின. தீ மளமளவென பக்கத்து வீட்டிற்கும் பரவத் தொடங்கியது.
சுதாரித்து எழுந்த ரியாசென்னும், மூன் மூன் சென்னும் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து உயிர் தப்பினர்.
தீ விபத்து குறித்து தீயணைப்பு போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதுகுறித்து ரியாசென் கூறும்போது, படுக்கை அறையில் உள்ள ஏர்கண்டிஷனரில் தீ பிடித்து வீட்டில் பரவி உள்ளது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார்.
Post a Comment