சீரியல்கள் மூலம் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முடியும்... ஆனால் அந்த சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் யூனியனிலேயே குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம். சங்கத்திற்கு புதிய தலைவியானவருக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு கிடைப்பதால் சங்க பிரச்சினைகளை பஞ்சாயத்து பண்ண நேரம் கிடைப்பதில்லையாம்.
இது போதாதா எதிர்கோஷ்டியினருக்கு வெறும் வாயை மென்றவர்கள் அவல் கிடைத்தால் விடுவார்களா? சங்கத்திலேயே கொடி பிடித்து கோஷ்டி பிரித்து விட்டார்களாம். இதனால் தினம் தினம் கூச்சலும் குழப்பமும் அரங்கேறியதாம்.
ஏற்கனவே அந்த மாதிரி பஞ்சாயத்துக்களை எப்படி தீர்ப்பது என்று குழம்பி போயிருந்தார் தலைவி. இதில் கோஷ்டி பிரச்சினை வேறு கும்மியடிக்கவே மன உளைச்சலுக்கு ஆளான புதிய தலைவி ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டாராம். தலைவியைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகளும் கடிதம் கொடுத்து விட்டார்களாம். அப்புறம் துணைதலைவரான காந்தமான நடிகரின் சமாதானப்படத்தை அடுத்து ராஜினாமாவை திரும்ப பெற்றுக்கொண்டார்களாம்.
டிவி சீரியல்களில்தான் குடும்பத்தை ரெண்டாக்க குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். இப்போது சங்கத்திலேயே வில்லத்தனம் செய்து கோஷ்டி பிரித்துள்ளதால் அங்கே சீரியலைக் காட்டிலும் சுவாரஸ்யமான காட்சிகள் தினம் தினம் அரங்கேறுகிறதாம்.
நடராஜர் சுண்டல் செய்திடுவார்... நடன இயக்குநரின் சாபம்
மானும் மயிலும் ஆடும் அந்த நிகழ்ச்சி அது... இதற்கு உலக அங்கீகார பாராட்டு கிடைத்துள்ளது. இதற்கு ஒருபுறம் சந்தோசப்பட்டாலும் தன்னுடைய நிகழ்ச்சிகளை பலரும் கிண்டல் செய்வதாக ஆதங்கப்படுகிறார் நிகழ்ச்சி தயாரிப்பாளரான நடன இயக்குநர். இப்படி யாராவது எங்கள் நிகழ்ச்சிகளை கிண்டல் செய்தால் அவர்களை நடராஜர் சுண்டல் செய்துவிடுவார் என்பது நடனத்தின் லேட்டஸ்ட் சாபமாம். இந்த சாபத்தைக் கேட்டு "என்னம்மா இதுக்குப் போயி இப்படி சாபம் கொடுக்கறீங்களேம்மா?" என்று கிண்டலடிக்கின்றனராம்.
Post a Comment