ஹைதராபாத்: தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தெலுங்கானா மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய மெகபூப் மாவட்டத்தில் இருந்து ஒரு கிராமத்தை தத்தெடுத்து இருக்கிறார்.
சமீபத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த ஸ்ரீமந்துடு திரைப்படம் (தமிழில் செல்வந்தன்) தெலுங்கானா மாநிலத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தெலுங்கானா மட்டுமல்லாது திரையிட்ட இடமெல்லாம் படம் ஓரளவிற்கு நன்றாக ஓடி வசூலைக் குவித்து வருகிறது, படத்தின் கதைப்படி மகேஷ்பாபு தான் பிறந்த கிராமத்தை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்காக பாடுபடுவார்.
சமீபத்தில் இந்த படத்தை பார்த்த தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மகன், தாராக ராமராவ் மகேஷ்பாபுவை வெகுவாகப் பாராட்டி இருக்கிறார்.
மேலும் படத்தைப் பற்றிக் கூறும்போது தெலுங்கானா மாநில அரசு செயல்படுத்தி வரும் ‘‘கிராம ஜோதி'' திட்டத்தை பிரபலப்படுத்தும் வகையில், படம் அமைந்து இருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதோடு மிகவும் பின் தங்கியுள்ள மெகபூப் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை நீங்கள் தத்து எடுக்க வேண்டும் என்றும், அவர் மகேஷ்பாபுவை கேட்டுக் கொண்டார்.
இந்த யோசனையை மகேஷ்பாபு ஏற்றுக் கொண்டதுடன் நீங்களே ஒரு கிராமத்தை சொல்லுங்கள், அதனை நான் தத்து எடுத்துக் கொள்கிறேன் என்று ராமராவிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
ராமராவ் யோசனைப்படி மெகபூப் மாவட்டத்தில் உள்ள பாலமோர் கிராமத்தை மகேஷ்பாபு தத்து எடுத்திருக்கிறார். இதனைப் பற்றி மகேஷ்பாபு கூறும்போது "விரைவில் அந்த கிராமத்துக்கு சென்று கிராம மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைப்பேன்" என்று உறுதி அளித்திருக்கிறார்.
தெலுங்கானா முதல்-மந்திரி அவர்கள் மகனின் பாராட்டு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மகேஷ்பாபு, விரைவில் தனது தந்தை (நடிகர் கிருஷ்ணா) பிறந்த குண்டூர் மாவட்டத்தில் உள்ள புர்ரி பாளையத்துக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு நலத்திட்டங்களை செய்து தரவும் முடிவு செய்திருக்கிறார்.
பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும், நிருபர்களுக்கு பேட்டி அளிப்பதையும் தவிர்த்து வரும் நடிகர் மகேஷ்பாபு, முதல் முறையாக அரசின் கிராம ஜோதி திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
மகேஷ்பாபு உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் தான்.
Post a Comment