மும்பையில் இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கு 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சமூக வலைத் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் சோனாக்ஷி சின்ஹா.
இதற்காக அவரை எதிர்த்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்காரர்கள் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஜெயின் சமூகத்தினரின் பண்டிகையையொட்டி, அவர்கள் அதிகம் வாழும் மிராபயந்தர் பகுதியில் 8 நாட்களுக்கு இறைச்சி விற்க தடை விதித்திருந்தது மாநகராட்சி. இந்தத் தடையை மும்பை முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதன்படி மும்பையில் 4 நாட்களுக்கு இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்துள்ள சோனாக்ஷி சின்ஹா, "இது சுதந்திர நாடு! இந்த பான்-இஸ்தான் (BAN-isthan)... அதாவது இந்தியாவை வரவேற்கிறேன். முட்டாள்தனமானது.. தன்னிச்சையானது," என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் இரு ட்வீட்டுகளையும் அவர் வெளியிட, உடனே அவரைக் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர் வலையுலகவாசிகள்.
காரணம் இதற்கு முன் சோனாக்ஷி, மிருக வதைக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார். விலங்குகளை இறைச்சிக்காக கொல்வதை நிறுத்துங்கள் என்று பிரச்சாரம் செய்தார். தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை மிருக வதை என்று கூறி தடையை தொடர வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதனால் அவரது முரண்பாடான கருத்துகளைக் கிண்டலடித்து ட்விட்டரில் ஏக பதிவுகள் வர ஆரம்பித்துள்ளன.
இன்னொரு பக்கம் பாஜகவினரும் ஆர்எஸ்எஸ் அபிமானிகளும் சகட்டு மேனிக்கு சோனாக்ஷியைத் திட்டியும் வருகின்றனர்.
சோனாக்ஷியின் தந்தை சத்ருகன் சின்ஹா பாஜகவில் முக்கிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment