சக்சேனா மீண்டும் புழல் சிறையிலடைப்பு!

|


சென்னை: மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சன் பிக்சர்ஸ் சக்சேனாவின் இரண்டு நாள் போலீஸ் காவல் முடிந்ததால் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார்.

நுங்கம்பாக்கத்தை சேர்ந்த டிஜிட்டல் கிராபிக்ஸ் கலைஞர் அருள்மூர்த்தி நுங்கம் பாக்கம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், "சிந்தனை செய் என்ற படத்தை அம்மா ராஜசேகர் என்பவர் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் எனக்கு கிராபிக்ஸ் செய்யும் பணி கொடுக்கப்பட்டது. இதற்காக ரூ.22 லட்சம் சம்பளம் தருவதாக கூறினார்கள்.

அதில் ரூ.11 லட்சம் மட்டுமே கொடுத்தனர். மீதி பணத்தை திருப்பி கேட்டபோது அம்மா ராஜசேகர் மற்றும் படத்தின் வினியோகஸ்தர் சன்பிக்சர்ஸ் சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் மிரட்டினர்," என்று கூறி இருந்தார்.

இது தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து சக்சேனா, அய்யப்பனை கைது செய்தனர். இந்த வழக்கில் 2 நாட்கள் காவலில் எடுத்து சக்சேனா மற்றும் அய்யப்பனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது போலீஸ் காவல் இன்றுடன் முடிந்தது.

இதைத்தொடர்ந்து இன்று மதியம் 1 மணிக்கு இருவரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஆகஸ்ட் 5-ந் தேதி வரை ஜெயிலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் மீண்டும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
 

Post a Comment