திரைப்பட வினியோகஸ்தர்களிடம் சேவை வரி வசூலிக்க இடைக்கால தடை!

|


சென்னை: திரைப்பட விநியோகஸ்தர்களிடம் சேவை வரி வசூலிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சினிமா வினியோகஸ்தர்களுக்கு சேவை வரி விதித்து மத்திய கலால்வரித்துறை சுற்றறிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து மீடியாஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சூர்யா ராஜகுமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், அனைத்து வினியோகஸ்தர்களின் வருமான பங்குத் தொகையில் இருந்து சேவை வரியைப் பிடித்துக் கொள்வதற்கு, தமிழ்நாடு சினிமா தியேட்டர் உரிமையாளர்கள், தமிழ்நாடு சினிமா வெளியீட்டாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், வினியோகஸ்தர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் அந்தத் தொகையை, தனியாக வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்கி, அதில் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.

சினிமா தயாரிப்பாளர், வினியோகஸ்தர், வெளியீட்டாளர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோருக்கு இடையே உள்ள வர்த்தக ஏற்பாட்டுக்கு இந்த சுற்றறிக்கை எதிராக உள்ளது. இதனால் எங்களின் தொழில் பாதிக்கப்படுகிறது. எனவே அந்த சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் 2 வாரத்தில் பதில்மனு தாக்கல் செய்வதற்கு மத்திய கலால் மற்றும் சுங்கவரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

 

Post a Comment