பில்லா 2 குறித்து அஜீத், விஜய் ரசிகர்கள் மோதல்: 3 பேர் படுகாயம்

|

Ajith Vijay Fans Attack Each Other In Tirupur

திருப்பூரில் நடிகர்கள் அஜீத், விஜய் ரசிகர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூரில் உள்ள அப்பாச்சி நகர் பகுதியில் நேற்று விஜய் ரசிகர்களும், அஜீத் ரசிகர்களும் பில்லா 2 படம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். சாதாரண பேச்சு காரசார வாக்குவாதமாகி மோதலில் முடிந்தது. விஜய் ரசிகர்களும், அஜீத் ரசிகர்களும் ஒருவரையொருவர் கையாலும், கட்டைகளாலும் தாக்கிக் கொண்டனர்.

இதில் விஜய் ரசிகர் கருப்பையா (37), அஜீத் ரசிகர்கள் சிவா (25), மோகன் (24) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அந்த 3 பேரும் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இரு தரப்பும் திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தன. அவர்களது புகாரின்பேரில் விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ராமராஜ், அன்பு, கருப்பையா, அஜீத் ரசிகர்கள் சிவா, பழனியப்பன், மோகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Post a Comment