லைலா கானி்ன் இகத்புரி பண்ணை வீட்டில் 6 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

|

6 Skeletons Found Laila Khan S Farm House

நாசிக்: பாலிவுட் நடிகை லைலா கானின் பண்ணை வீட்டில் இருந்து 6 எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை கொலை செய்யப்பட்ட லைலா கான் மற்றும் அவருடயை குடும்பத்தாருடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாலிவுட் நடிகை லைலா கான், தாயார் ஷெலீனா, சகோதரிகள் ஹஸ்மினா, ஜாரா, தம்பி இம்ரான் மற்றும் உறவினர் ஒருவர் ஆகியோர் கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்மமான முறையி்ல் காணாமல் போனார்கள். இதையடுத்து லைலாவின் தந்தை நாதீர் பட்டேல் ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அவர் தனது புகாரி்ல், பாகிஸ்தானைச் சேர்ந்த பர்வேஸ் தக் மற்றும் அவனுடைய கூட்டாளி ஆஷிப் ஷேக் ஆகியோர் தான் லைலாவையும் மற்றவர்களையும் கடத்தியதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பர்வேஸ் தக் காஷ்மீர் போலீசாரிடம் சிக்கினார். அவர் பயன்படுத்தி வந்த கார் லைலா கானின் தாயாருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிப் ஷேக்கும் கைது செய்யப்பட்டார். பர்வேஸ் தக்கை மும்பை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரித்ததில் லைலா கான் மற்றும் அவரது குடும்பத்தார் சுட்டுக் கொல்லப்பட்டதாக பர்வேஸ் தெரிவித்தார்.

கொலைக்கான காரணம்:

லைலாவின் தாய் ஷெலீனா நாதீர் பட்டேலைப் பிரிந்த பிறகு பர்வேஸுடன் தொடர்பு வைத்து அவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

லைலா கான் தனது குடும்பத்தாருடன் நாசிக் அருகே உள்ள இகத்புரியில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தார். பர்வேஸும் அந்த வீட்டில் வந்து தங்கிச் சென்றுள்ளார். இதற்கிடையே ஷெலீனாவுக்கும் பர்வேஸின் கூட்டாளி ஆசிப் ஷேக்கிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அவரை 3வது திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த பர்வேஸ் ஆத்திரத்தில் ஷெலீனாவை தாக்கினார். இதில் அவர் இறந்து போனார். இதைப் பார்த்த லைலா கான் உள்ளிட்ட 5 பேரை அவர் சுட்டுக் கொன்றார். இதை அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் பர்வேஸ் தக்கை அழைத்துக் கொண்டு இகத்புரி பண்ணை வீட்டுக்கு சென்றனர். அங்கு 6 எழும்புக்கூடுகள், கத்தி, கட்டை, 2 செல்போன்கள், பை நிறைய பெண்கள் உடைகள், நகைகள் ஆகியவை கிடைத்துள்ளன. அந்த எலும்புக் கூடுகள் லைலா கான் மற்றும் அவருடைய குடும்பத்தாருடையதாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

Post a Comment