கோச்சடையானை வாங்கிய கையோடு இப்போது சூர்யா நடித்துள்ள மாற்றான் படத்தையும் ஜெயா டிவி பெரும் விலை கொடுத்து வாங்கி விட்டதாம். பெரிய பெரிய படங்களை கை நழுவ விட்டுக் கொண்டிருப்பதால் சன் டிவி கையைப் பிசைந்து கொண்டிருக்கிறதாம்.
தமிழில் புதிய படங்களை, குறிப்பாக சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களை வாங்கும் டிவி சானல் எது என்றால் ப்ரீகேஜி குழந்தை கூட சன் டிவி என்றுதான் சொல்லும். அந்த அளவுக்கு திரைப்படங்களை வாங்கிக் குவிப்பதில் சன் டிவி முன்னணியில் இருந்து வந்தது. தற்போது அந்த இடத்தைத் தகர்க்க ஆரம்பித்துள்ளது ஜெயா டிவி.
இதற்காகவே தனி டீம் அமைத்து பெருமளவில் பணத்தை வாரியிறைத்துப் புதிய படங்களை, குறிப்பாக முக்கிய நடிகர்களின் படங்களை வாங்க ஆரம்பித்துள்ளதாம் ஜெயா டிவி.
டிவி உரிமையை வாங்குவதில் இப்போது சன் டிவிக்கும், ஜெயா டிவிக்கும் இடையேதான் கடும் போட்டி நடக்கிறதாம். இதில் சமீபகாலமாக ஜெயா டிவி வெல்ல ஆரம்பித்திருப்பது சன் டிவியை கலங்க வைத்துள்ளதாம்.
சமீபத்தில்தான் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கோச்சடையான் படத்தை மிகப் பெரிய விலை கொடுத்து ஜெயா டிவி வாங்கியது. இந்த நிலையில் திங்கள்கிழமையன்று சூர்யா நடித்துள்ள மாற்றான் படத்தையும் பெரிய விலை கொடுத்து வாங்கிப் போட்டு விட்டனராம்.
மிகப் பெரிய விலை கொடுத்து புதிய படங்களை வாங்குவதில் எந்தக் காலத்திலுமே ஜெயா டிவி அக்கறை காட்டியதில்லை. கேட்டுப் பார்ப்பார்கள் விலை படியவில்லை என்றால் போய் விடுவார்கள். ஆனால் தற்போது அப்படி இல்லையாம், என்ன விலை கொடுத்தாவது வாங்கி விடுகிறார்களாம். படம் சன்னுக்குப் போகக் கூடாது என்பது மட்டுமே தற்போதைக்கு அவர்களது ஒரே நோக்கமாக உள்ளதாம்.
இதுகுறித்து ஜெயா டிவியின் துணைத் தலைவரான சுனில் கூறுகையில் தற்போது புதிய படங்களை வாங்குவதில் வேகம் காட்ட ஆரம்பித்துள்ளோம். மேலும் சில படங்களை வாங்குவது குறித்து பேச்சு நடந்து வருகிறது. விரைவில் அவை முடியும். பெரிய நடிகர்களின் படங்கள் என்று இல்லாமல், சிறிய படங்களையும் கூட நாங்கள் வாங்குகிறோம் என்றார்.
ஜெயா டிவி ரஜினி, சூர்யா என கிளம்பியிருப்பதால் சன் டிவி நிர்வாகத்தினர் டென்ஷனில் உள்ளனராம். தற்போது ஆட்சி, அதிகாரம் எல்லாம் ஜெயா டிவிக்கு சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது. சன் டிவியைப் பொறுத்தவரை அதன் முக்கியத் தளபதிகளில் ஒருவரான தயாநிதி மாறன் பதவியில்லாமல் இருக்கிறார். வெறும் எம்.பியாக மட்டுமே இருக்கிறார். திமுகவிலும் கூட முன்பு போல அவர் சுதந்திரமாக இல்லை.
மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் கிட்டத்தட்ட மூடு விழா கண்டநிலையில் படுத்துக் கிடக்கிறது. அதை திறம்பட நிர்வகித்த ஹன்ஸ்ராஜ் சக்சேனா முடங்கிப் போய் விட்டார். சன் நியூஸ் சானலுக்கும் புதிய தலைமுறை மூலம் கடும் சவால்... இப்படி பலமுனைத் தாக்குதலில் சன் சிக்கியிருப்பதால் அந்த டிவியால் ஜெயா டிவியுடன் போட்டி போட முடியாத நிலை இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். இன்னும் கொ்ஞ்ச காலத்துக்கு சன் டிவி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தாக வேண்டிய நிலையில்தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெயா டிவி மட்டுமல்லாமல் விஜய் டிவியும் கூட சன்னுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது. அந்த டிவியின் வித்தியாசமான நிகழ்ச்சிகள் சன் டிவியை பெரும் சரிவுக்கு கொண்டு போய்க் கொண்டிருக்கின்றன. சன் டிவி அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைப்பது அவர்களுக்கே கூட போரடித்துப் போய் விடும் நிலையில்தான் உள்ளது. ஆனால் விஜய் டிவி தரும் வித்தியாசம், அந்த சானலுக்குப் பல புதிய ரசிகர்களை கொண்டு வந்து சேர்க்கிறது.
அது மட்டுமல்லாமல் விஜய்யும் கூட இப்போது போட்டி போட்டுக் கொண்டு புதிய படங்களை சரமாரியாக வாங்க ஆரம்பித்துள்ளது. சிறுத்தை, அவன் இவன், நண்பன் என இவர்களின் லிஸ்ட் பெரிதாகிக் கொண்டு போவதால் விஜய்யிடமும் சிக்கித் தவிக்கிறது சன்.
மறுபக்கம் ஜீ தமிழ் டிவியும் இப்போது புதிய படங்களை வாங்குவதில் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளது. சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை இந்த டிவிதான் வாங்கியுள்ளதாம்.
ஜெயா, விஜய் என போட்டிகள் வலுத்துக் கொண்டே போகும் நிலையில் அதை சமாளிக்கும் வழிகள் குறித்து சன் டிவி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறதா என்பது தெரியவில்லை.
Post a Comment