மறந்துடாதீங்க, புதன்கிழமை சன் டிவியில் கரகாட்டக்காரன் போடுறாங்க!

|

It S Goundamani Senthil Vaaram Su

சன் டிவியின் வார வரிசையில் இந்த வாரம் கவுண்டமணி - செந்தில் வாரம். அசத்தலான ஐந்து படங்கள் மூலம் தங்களது கோடானுகோடி ரசிகர்களை கலக்க வருகிறார்கள் தமிழ் திரையுலகின் லாரல் -ஹார்டி என போற்றப்படும் கவுண்டமணியும், செந்திலும்.

காதல் செவ்வாய், காவிய புதன், சூப்பர் ஹிட் வெள்ளி என்று அட்டகாசமான அடைமொழிகளுடன் திரைப்படங்களை ஒளிபரப்புவதில் புதுமை படைத்த சன் டிவியில் ஒவ்வொரு நடிகர்களுக்கும், நடிகைக்கும் வாரம் ஒதுக்கியும் படங்களை ஒளிபரப்பி வந்தனர் முன்பு. இப்போது அந்த வார வரிசை மறுபடியும் வந்துள்ளது.

இப்போது காமெடி வரிசைக்கு வந்துள்ளனர். அதாவது கவுண்டமணி- செந்தில் வாரத்திற்கு வந்துள்ளனர். இந்த வாரம், அதாவது இன்று முதல் வருகிற வெள்ளிக்கிழமை முதல் கவுண்டமணி-செந்திலின் சூப்பர் ஹிட் காமெடி காட்சிகள் அடங்கிய திரைப்படங்களை ஒளிபரப்புகின்றனர்.

இன்று காமெடி, சென்டிமென்ட், காதல் என அனைத்திலும் சூப்பர் ஹிட் படமான வைதேகி காத்திருந்தாள் படம் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இப்படத்தின் மூலம் தமிழகத்தில் பலருக்கும் கோமுட்டித் தலையன் என்ற அழகான அடைமொழி கிடைக்கக் காரணமாக இருந்தார் கவுண்டமணி. கவுண்டமணி, செந்தில் இணையில் வந்த முதல் சூப்பர் ஹிட் படம் இதுதான் என்பதும் இப்படத்திற்கு உள்ள சிறப்பம்சமமாகும்.

நாளை சரத்குமார், மீனா நடித்த நாடோடி மன்னன் ஒளிபரப்பாகிறது. இப்படத்திலும் கவுண்டமணி, செந்திலின் காமெடி ஓஹோவென பேசப்பட்டது.

புதன்கிழமைதான் இந்த வாரத்தின் ஹைலைட் படம் ஒளிபரப்பாகிறது. அதாவது கரகாட்டக்காரன் போடுகிறார்கள். இப்படத்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை. எத்தனை முறை பார்த்தாலும், எந்த நேரத்தில் பார்த்தாலும், எப்படிப்பட்ட மன நிலையில் பார்த்தாலும் சிரித்து ரசிக்காமல் இருக்கவே முடியாது. அப்படிப்பட்ட கரகாட்டக்காரன் புதன்கிழமை ஒளிபரப்பாகிறது. சாப்பிட்டு முடித்து விட்டு கையில் ரெண்டு வாழைப்பழத்தோடு உட்கார்ந்து படத்தைப் பாருங்க...

வியாழக்கிழமை கார்த்திக் நடிக்க லக்கிமேன் ஒளிபரப்பாகிறது. இதில் கவுண்டமணிதான் எமன், செந்தில்தான் சித்திரகுப்தன். இவர்கள் இருவரும் பூமிக்கு வந்து அடிக்கும் லூட்டிகள் செம கலக்கல் காட்சிகள்.

முத்திரையாக, வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவின் டிரென்ட் செட் படமான சின்னக் கவுண்டர் ஒளிபரப்பாகிறது. இதில் நகைச்சுவை மன்னன் கவுண்டமணியோடு, வடிவேலுவும் இணைந்து அசத்தியிருப்பார். வடிவேலு எப்படி ஒல்லியாக, குச்சி போல காணப்பட்டார் என்பதைப் பார்க்க ஆசையாக இருந்தால் இந்தப் படத்தை மறக்காமல் பாருங்கள்.

 

Post a Comment