திருவனந்தபுரம்: உயிலில் எழுதி வைத்தப்படி தங்கள் குடும்பத்துக்கு சேர வேண்டிய சொத்துகளை தர மறுக்கும் அமைச்சர் கணேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் சகோதரர் சங்கரராமன் புகார் அளித்தார்.
பிரபல நடிகை ஸ்ரீவித்யா புற்றுநோய் காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2006ம் ஆண்டு இறந்தார். அவருக்கு சென்னை, திருவனந்தபுரத்தில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அவர் இறப்பதற்கு முன்பாக உயில் எழுதியுள்ளார்.
அதில் தனது சொத்துகள் சிலவற்றை சகோதரர் சங்கர ராமன் மற்றும் குடும்பத்தினர் பெயரில் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர தனது பெயரில் அறக்கட்டளை தொடங்கி இசையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு தனது சொத்துக்கள் மற்றும் அறக்கட்டளையை நிர்வகிக்கும் உரிமையை மலையாள நடிகரும், தற்போதைய கேரள அமைச்சருமான கணேஷ்குமாருக்கு அளி்ப்பதாகவும் உயிலில் ஸ்ரீவித்யா கூறியிருந்தார்.
இதன்படி ஸ்ரீவித்யாவின் சொத்துக்களை அமைச்சர் கணேஷ்குமார் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள ஸ்ரீவித்யாவின் சகோதரர் சங்கரராமனும், அவருடைய குடும்பத்தினரும் கேரள முதல்வர் உம்மன் சாண்டியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் சங்கர ராமன் கூறியிருப்பதாவது,
எனது சகோதரி ஸ்ரீவித்யா இறப்பதற்கு முன் எழுதி வைத்துள்ள உயிலின்படி எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் கிடைக்க வேண்டிய சொத்துக்களை அமைச்சர் கணேஷ்குமார் தர மறுக்கிறார். நாட்டியத்தில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்க அறக்கட்டளை ஏற்படுத்த ஸ்ரீவித்யா உயிலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஸ்ரீவித்யா இறந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அறக்கட்டளையை அமைக்க அமைச்சர் கணேஷ்குமார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் எனது இன்னொரு சகோதரரின் மகளுக்கு ரூ.10 லட்சம் தரும்படியும் உயிலில் கூறப்பட்டுள்ளது. இதுவரை அந்த பணத்தையும் அவர் தரவில்லை. எனவே உயிலில் குறிப்பிட்டுள்ளபடி எங்களுக்கு சேர வேண்டிய சொத்துகளை தர மறுக்கும் அமைச்சர் கணேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அந்த மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் உம்மன் சாண்டி இது தொடர்பாக ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Post a Comment