கதைக்கு பஞ்சமோ பஞ்சம்... ரீமேக்கில் 9 பழைய தமிழ்ப் படங்கள்!

|

Kollywood The Mood Remaking Hits 80

சென்னை: தமிழ் சினிமாவில் கதைக்கு ஏற்பட்டுள்ளது உங்க வீட்டுப் பஞ்சம் எங்க வீட்டுப் பஞ்சம் இல்லை.. மெகா பஞ்சம்!

எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு பழைய தமிழ்ப் படத்தை ரீமேக் பண்ண டிஸ்கஷன் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

குறிப்பாக எண்பதுகளில் சூப்பர் ஹிட்டடித்த படங்களை, போட்டி போட்டுக் கொண்டு உரிமையை வாங்கி வைத்திருக்கிறார்கள் பிரபல இயக்குநர்களும் முன்னணி ஹீரோக்களும்.

ஏற்கெனவே படிக்காதவன், பில்லா, மலையூர் மம்பட்டியான் போன்ற படங்கள் ரீமேக்காகி வந்தன. இவற்றில் பில்லா மட்டும் பெரும் வெற்றி பெற்றது. மம்பட்டியான் ஓரளவுக்கு ஓடியது.

இப்போது தில்லுமுல்லு, மன்மத லீலை, சட்டம் ஒரு இருட்டறை, அக்னி நட்சத்திரம், சகலகலா வல்லன், ஆண் பாவம், புதியபாதை, அமைதிப்படை, இன்று போய் நாளை வா ஆகிய 9 படங்கள் மீண்டும் ரீமேக்காகவிருக்கின்றன.

மன்மத லீலை, சகலகலா வல்லன் படங்கள் கமல் நடித்தவை. தில்லுமுல்லு ரஜினியின் படம். சட்டம் ஒரு இருட்டறை விஜயகாந்த் நடிப்பில் வந்தது. அக்னி நட்சத்திரம் பிரபு, கார்த்திக்கும், ஆண்பாவம் படத்தில் பாண்டியராஜன், பாண்டியனும் இணைந்து நடித்து இருந்தனர். புதிய பாதையில் பார்த்திபனும், அமைதிப்படையில் சத்யராஜும் நடித்து இருந்தனர்.

இன்று போய் நாளை வா படத்தில் பாக்யராஜ் நடித்து பட்டையைக் கிளப்பிய படம். இவற்றில் 5 படங்களுக்கு இசை இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படங்களை இப்போது ரீமேக் செய்யும் முயற்சியில் இருப்பவர்கள் அனைவருமே முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள்.

புதிய கதையைத் தேடிக் கொண்டிருக்காமல், ஏற்கெனவே பிரபலமாகிவிட்ட பழைய படங்களை ரீமேக் செய்வது பாதுகாப்பானது என இவர்கள் நினைப்பதே ரீமேக்குக்கு காரணம். அதுமட்டுமல்ல, கடந்த காலங்களில் தமிழில் சக்கைப் போடுபோட்ட தமிழ்ப் படங்களை இந்தி இயக்குநர்கள் சத்தமில்லாமல் சுட்டு ப்ளாக் பஸ்டராக்குவதால், அந்த வேலையை நாமே செய்துவிடலாம் என்று இந்த ரீமேக் முயற்சியில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

 

Post a Comment