மோசடி செய்த பணத்தில் மகனை சினிமாவில் நடிக்க வைத்த சிறுசேமிப்பு பெண் ஏஜெண்ட்!

|

Small Savings Lady Agent Paid Hefty

சென்னை: தபால் நிலையத்தில் சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் கட்டியவர்களை ஏமாற்றி மோசடி செய்த பணத்தில் மகனை சினிமாவில் நடிக்க வைத்ததாக பெண் ஏஜெண்ட் அமிர்தம்மாள் வாக்குமூலம் தந்துள்ளார்.

திருவொற்றியூர் தபால் நிலையத்தில் சிறுசேமிப்பு துறை ஏஜெண்டாக பணியாற்றியவர் அமிர்தம்மாள்(வயது 55). இவர் மூலமாக தபால் நிலைய சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்தவர் மேற்கு தாம்பரத்தை சேர்ந்த சுப்பிரமணி (55). தனது பாஸ் புத்தகத்தை அமிர்தம்மாள் திருத்தி ரூ.7 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அமிர்தம்மாளை கைது செய்து போலீஸ் விசாரித்த போது, அவர் இதே போன்று 200-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி ரூ1.5 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது அம்பலமானது.

தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டத்தில் பணத்தை போட்டால் வருமானவரி கிடையாது என்பதால் ஓய்வு பெற்ற தாசில்தார், அரசு டாக்டர், வங்கி ஊழியர்கள், என ஏராளமானோர் ரூ.10 லட்சம் வரை அமிர்தம்மாள் மூலம் தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டத்தில் டெபாசிட் செய்துள்ளனர். அவர்களிடம் நைஸாகப் நம்பிக்கை ஏற்பட வைத்து அவர்களின் பாஸ் புத்தகத்தை திருத்தி மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

சிறையில் அடைக்கப்பட்ட அமிர்தம்மாளை கடந்த வெள்ளிக்கிழமை 3 நாள் காவலில் எடுத்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்தனர்.

'மகனை நடிக்க வைக்கவே மோசடி செய்தேன்'

போலீசாரிடம் அமிர்தம்மாள் கொடுத்துள்ள வாக்குமூலத்தில்; மோசடி செய்த பணத்தில் தனது மகன் ரமேசுக்கு ஒரு வீடும், காரும் வாங்கி கொடுத்ததாகவும், ரமேஷ் `துள்ளுவதோ இளமை', 'எதிரி' ஆகிய படங்களில் துணை நடிகராக நடிப்பதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும் கூறினார்.

துள்ளுவதோ இளமை தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா தயாரித்து இயக்கிய படம். எதிரி கேஎஸ் ரவிக்குமார் படம்.

மேலும் பல இடங்களில் வட்டிக்கு பணம் வாங்கி இருந்ததாகவும் அதையும் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

3 நாள் போலீஸ் காவலுக்கு பின் நேற்று அவரை போலீசார் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அமிர்தம்மாளிடம் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள அமிர்தம்மாளின் மகன் ரமேஷ், நாராயணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

 

Post a Comment