சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் வரவர போரடிப்பதாக இல்லத்தரசிகள் குமுறத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தங்கம் தொடரில் வில்லத்தனம் சகிக்கமுடியவில்லை என்பது நேயர்களின் கருத்தாகும்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தங்கம் தொடரில் அநேகமாக எல்லோரும் ஐ.ஏ.எஸ் படித்துவிடுவார்கள் போல. ஆரம்பத்தில் கதாநாயகி ரம்யா கிருஷ்ணன்தான் ஐ.ஏ.எஸ் படித்தார். பின்னர் கலெக்டரை திருமணம் செய்து கொண்டு நீண்ட நாட்களாக சப் கலெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
இப்பொழுது அவரது தங்கை ரமா ஐ.ஏ.எஸ் படிக்கிறார். இவர்களுக்கு இடையே எட்டாவது மட்டுமே படித்த இளவஞ்சி ஐ.ஏ.எஸ் படிக்கப்போவதாக கூறிக் கொண்டிருக்கிறார். இதில் டுடேரியலுக்கு வேறு போய் வந்தார். இவற்றை எல்லாம் பார்த்து ஐ.ஏ.எஸ் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கேஸ் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த தொடரில் தாய்மாமன் குலசேகரன்தான் வில்லன் என்றால் பங்காளி குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி வில்லியம்ஸ் அதை விட வில்லத்தனம் செய்கிறார். அவருக்குத் துணையாக அவருடைய மகன்களும், மகளும் செய்யும் வில்லத்தனம் சகிக்கமுடியாத ரகமாக மாறிவருகிறது. இவற்றை பார்க்கும் போது இனி சொந்தக்காரங்களை நம்புவதற்கு கூட யோசிப்பார்கள்.
இந்த தொடரில் வந்தனா, சாந்தி வில்லியம்ஸ் இணைந்து செய்யும் வில்லத்தனம் சகிக்க முடியவில்லை என்று எரிச்சலடைகின்றனர் இல்லத்தரசிகள். அதுவும் விஜயகுமாரின் குடும்பத்தை அழித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர்கள் செய்யும் வில்லத்தனம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது.
யாரென்றே தெரியாமல் கலெக்டரின் பி.ஏ. வாக வந்தபோது யார் இந்த வந்தனா என்று கேட்க வைத்தவர். பின்னர் திடீரென்று சாந்தி வில்லியம்ஸ்சின் மகளாக வந்து ஐயா குடும்பத்திற்கு எதிராக வில்லத்தனம் செய்து வருகிறார். கடைசி மகள் சாருவை கடத்துவதாகட்டும், கோவில் பூசாரியை தேடி சென்று ரகசியத்தை தெரிந்து கொள்வதாகட்டும் இவர்களின் வில்லத்தனம் கொஞ்சம் எரிச்சல் ரகமாக இருப்பதாக சொல்கின்றனர்.
இதுபோன்ற சீரியல் வில்லத்தனங்களைப் பார்த்து நேரத்தையும், மின்சாரத்தையும் வீணாக்குவதை விட பேசாமல் டிவியை நிறுத்திவிட்டு ரெஸ்ட் எடுத்தால் மின்சாரம் மிச்சமாவதோடு, காசும் மிச்சமாகும் என்கின்றனர் இல்லத்தரசிகள். நல்ல முடிவுதான் போங்கள்.
Post a Comment