பழம்பெரும் நடிகர் பெரிய கருப்பு தேவர் மரணம்

|

Veteran Actor Periya Karuppu Thevar Dies

சென்னை: பழம் பெரும் நாடக நடிகரும், திரைப்பட நடிகரும், கிராமியப் பாடகருமான பெரிய கருப்பு தேவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

மதுரை மாவட்டம் கருமாத்தூரைச் சேர்ந்தவர் பெரியகருப்புத் தேவர். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் இடம் பெற்றிருந்த பிரபலமான நடிகர். கிராமியப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். திரைப்படங்களிலும் நிறைய நடித்துள்ளார். மண்வாசனை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் இவர் பாடிய பாடல் பிரபலமானது. கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் இவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.

75 வயதான பெரிய கருப்புத் தேவருக்கு அன்ன மயில் என்ற மனைவியும், நான்கு மகன்களும் உள்ளனர். அன்ன மயில் ஏற்கனவே இறந்து விட்டார். குடும்பத்துடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார் பெரிய கருப்புத் தேவர்.

சில நாட்களுக்கு முன்பு இவரது மகன் பால் பாண்டிக்குக் குழந்தை பிறந்திருந்தது. பேரன் பிறந்ததால் மகிழ்ச்சி அடைந்த பெரிய கருப்புத் தேவர் பேரனைப் பார்க்கப் போகிறேன் என்று மகிழ்ச்சியுடன் சிரித்தபடி கூறியுள்ளார். அப்போது அவருக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு நேற்று அவர் மரணமடைந்தார்.

திரையுலகினர் இரங்கல் செலுத்துவதற்காக பெரிய கருப்புத் தேவரின் உடல் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டது. பின்னர் கருமாத்தூருக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பெரிய கருப்புத் தேவரின் ஒரு மகனான விருமாண்டி திரைப்பட இணை இயக்குநராகவும், இன்னொரு மகன் கார்த்திக் கலை இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்கள்.

 

Post a Comment