சேலம்: சேலம் கிச்சிப்பாளையத்தில் மாற்றான் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள், திடீரென தியேட்டரின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அலறியடித்து ஓடினர். இதில் 3 பேர் காயமடைந்தனர். படம் பாதியில் நின்றதால் டிக்கெட் கட்டணத்தை ரசிகர்கள் திருப்பிக் கேட்க, தியேட்டர்காரர்கள் மறுக்க ரசிகர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
கிச்சிப்பாளையம் கைலாஷ் தியேட்டரில் மாற்றான் படம் இன்று வெளியானது. ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அப்போது திடீரென தியேட்டரின் மேற்கூரையிலிருந்து மண் பொதபொதவென கொட்டியது. அடுத்து கூரை இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 3 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக படம் நிறுத்தப்பட்டது. ரசிகர்கள் அலறிப் புடைத்து வெளியே ஓடினர். இந்த நிலையில் படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் அதிக விலை கொடுத்து வாங்கிய டிக்கெட்டுக்குரிய கட்டணத்தை ரசிகர்கள் திருப்பிக் கேட்டனர். ஆனால் தியேட்டர்காரர்கள் கொடுக்க முடியாது என்று கூறினர். இதனால் ஆவேசமடைந்த ரசிகர்கள் தியேட்டர் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து ரகளையில் இறங்கினர்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து ரசிகர்களை சமாதானப்படுத்தினர்.
Post a Comment