விஸ்வரூபத்துக்கு தடை வருமா...? - ஜனவரி 8-ம் தேதி வழக்கு தள்ளி வைப்பு!

|

Will Court Ban Viswaroopam   

சென்னை: விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்கக் கூடாது என கமல் தரப்பில் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர். இந்த வழக்கு வரும் 8-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், படத்தை திட்டமிட்டபடி கமலால் வெளியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் ரீஜெண்ட் சாய்மிரா எண்டர்டைன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் ராஜேந்திர ஜெயின் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், "மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிக்க சந்திரஹாசன், கமல்ஹாசன் ஆகியோருடன் 2008 ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டோம். ஆனால் படம் தொடங்கப்படவில்லை. இதனால் எங்கள் நிறுவனத்துக்கு ரூ.10 கோடியே 50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக உள்ளது. மர்மயோகி படத்துக்காக வாங்கிய தொகையை ராஜ்கமல் நிறுவனம் திருப்பித் தராத வரை, விஸ்வரூபம் படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது," என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி வினோத்குமார் சர்மா விசாரிக்கிறார். ராஜ்கமல் நிறுவனம் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "இது பொய் வழக்கு. இதுபோன்ற மனு ஒன்றை பிரமிட் சாய்மீரா என்ற பெயரில் தாக்கல் செய்து, ரூ.10 கோடி கேட்டுள்ளனர். அந்த வழக்கில் அந்த தொகைக்கான உத்தரவாதத்தை அளித்திருக்கிறோம். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தொடரப்பட்டுள்ள மற்றொரு வழக்கை ஏற்க முடியாது.

விஸ்வரூபம் படத்தை தமிழ் மற்றும் இந்தியில் ரூ.90 கோடி செலவில் தயாரித்து 10 -ந்தேதி டி.டி.எச். முறையிலும், 11 -ந்தேதி திரையரங்குகளிலும் வெளியிட உள்ளோம். இப்போது இதற்கு தடை விதித்தால் பெருத்த நஷ்டத்துக்கு உள்ளாவோம். எனவே விஸ்வரூபத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்," என்று கூறியுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணையை 8-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்குகளால் விஸ்வரூபம் படத்துக்கு தடை வருமா என்ற பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

 

Post a Comment