சென்னை: கலைஞர் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ரமேஷ்பிரபா நேற்று காலை அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கேலக்சி நிறுவனத்தை தொடங்கிய ரமேஷ் பிரபா, சன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். பின்னர் படிப்படியாக நிகழ்ச்சி தயாரிப்பாளராக மாறிய அவர், லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு, சமையல் நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார். பின்னர் 2008ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. அப்போது சன் டிவியில் இருந்து கலைஞர் டிவிக்கு மாறினார்.
கலைஞர் தொலைக்காட்சி நிறுவன குழுமத்தில் இருந்து கலைஞர் தொலைக் காட்சி, இசையருவி, சிரிப்பொலி, கலைஞர் செய்திகள், சித்திரம், முரசு என 6 சேனல்கள் உதயமானது. இந்த நிலையில் இதன் தலைவராக இருந்த சரத்குமார் 2ஜி ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்றார். இதன்பின்னர் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு அதன் தலைவராக கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றார் ரமேஷ்பிரபா.
கடந்த 11 மாதங்கள் இப்பொறுப்பை அவர் வகித்து வந்த நிலையில் நேற்று காலை முதல் அந்தப் பொறுப்பிலிருந்து அவர் திடீரென்று நீக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதில் கருணாநிதியின் உறவினர் அமிர்தம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.
கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவில் முக்கிய பங்கு வகித்தவர் ரமேஷ்பிரபா. 2ஜி ஊழல் வழக்கு விவகாரத்தில் கலைஞர் தொலைக்காட்சி சிக்கிய போது நெருக்கடியான கால கட்டத்தில் தலைவராக பதவி வகித்து திறம்பட நிர்வாகம் செய்தவர். திடீரென்று அவரை நீக்கியதற்கான காரணம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. காலை அலுவலகம் வந்த பின்னர்தான் அவருக்கு நீக்கம் பற்றி அறிவிக்கப்பட்டதாம். இதன்பின் அவர் சிறிது நேரத்திலேயே கிளம்பிச் சென்று விட்டதாக சொல்கிறார்கள்.
Post a Comment