சென்னை: திரையுலகினருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கமல் முதல் ஆளாக நிற்பார். ஆனால் விஸ்வரூபம் பட விவகாரத்தில் நடிகர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக இல்லை. இது வருத்தம் தருகிறது, கண்டனத்துக்குரியது என்று கமல்ஹாசன் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு எழுந்துள்ள மிகப் பெரிய சிக்கலால் அவரது ரசிகர்கள் அதிருப்தியும், வருத்தமும் அடைந்துள்ளனர். தற்போது மிகப் பெரிய திருப்பமாக படத்தைத் திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளதால் அவர்கள் ஆவேசமடைந்துள்ளனர்.இது நாள் வரை அமைதியாக இருந்து வந்த அவர்கள் இன்று கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டையில் உளள அலுவலகம் முன்பு குவிந்தனர்.
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பெருமளவிலான ரசிகர்கள் வந்ததால் போலீஸார் உஷாரானார்கள்.இருப்பினும் ரசிகர்கள் அமைதியான முறையில் திரண்டு நின்றனர். விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், படத்தைத் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று கோரி அவர்கள் கோஷமிட்டனர்.
தென் சென்னை மாவட்ட கமல்ஹாசன் நற்பணி மன்ற செயலாளர் தயாளன் என்பவர் கூறுகையில், கமல் ரசிகர்கள் எப்போதுமே பொறுமை காக்க கூடியவர்கள். கமல் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருக்கிறோம். எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. இதே நிலை நீடித்தால் பொங்கி எழுவோம்.
திரையுலகினருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கமல் முதல் ஆளாக நிற்பார். ஆனால் விஸ்வரூபம் பட விவகாரத்தில் நடிகர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக இல்லை. இது கண்டிக்கத்தக்கது என்றார்.
அதேபோல தமீம் என்ற ரசிகர் கூறுகையில், கமல் எந்த மதத்தையும் புண்படுத்தி படம் எடுக்க கூடியவர் அல்ல. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் அனைவரையும் சகோதரர்களாகத்தான் பார்ப்பார். விஸ்வரூபம் படத்தை தடை செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.
Post a Comment