விஸ்வரூபம் மீதான தடை சரியல்ல - மத்திய அரசு மறைமுக கருத்து

|

Centre Comments On Viswaroopam Ban

டெல்லி: தணிக்கை வாரியம் ஒரு திரைப்படத்திற்கு அனுமதி கொடுத்து விட்டால் அதை தடை செய்வது குறித்து பலமுறை யோசிக்க வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறியுள்ளார்.

இதன் மூலம் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை சரியல்ல என்பதை மத்திய அரசு மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து மணீஷ் தீவாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு படம் சரியா, தவறா என்பது குறித்து முழுமையாக பரிசீலிக்கும் பொறுப்பில் தணிக்கை வாரியம் உள்ளது. தணிக்கை வாரியம் ஒரு படத்தைப் பரிசீலித்து அதை அங்கீகரித்து சான்றிதழ் அளித்த பின்னர் அதை தடை செய்வது என்பது பலமுறை யோசித்த பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும்.

இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு அது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை மீறுவதாக அமைந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமாகும் என்றார் திவாரி.

இதன் மூலம் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை சரியல்ல என்பதை மத்திய அரசு மறைமுகமாக கூறியிருப்பதாக தெரிகிறது.

 

Post a Comment