மும்பை: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண்களை வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.
அமிதாப் பச்சன் நடத்தி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ஒரு பெண் ரூ. 5 கோடி பரிசுத் தொகையைத் தட்டிச் சென்றுள்ளார். அப்போதுதான் இந்த வார்த்தையைக் கூறினார் அமிதாப் பச்சன். அப்பெண்ணின் பெயர் சுமீத் கெளர் ஷானி. இல்லத்தரசியான இவர் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ. 5 கோடி பரிசுத் தொகையைத் தட்டிச் சென்று அசத்தியுள்ளார்.
சுமீத்தைப் பாராட்டி அமிதாப் பச்சன் பேசுகையி்ல, இளம்பெண்களை மானபங்கப்படுத்துவது, கேலி செய்வது, அவமானப்படுத்துவது ஆகிய காலமெல்லாம் இனி மலையேறி விடும். ஆண்கள் நிறைந்த இந்த உலகில், ஒரு பெண் சாதனை படைத்திருப்பதைப் பார்த்து நான் நிறைய மகிழ்ச்சி அடைகிறேன். மிக மிக சந்தோஷமாக இருக்கிறது.
ஆண்களுடன் போட்டியிட்டு சுமீத் கெளர் செய்துள்ள இந்த சாதனை மிகப் பெரியது. பெண்கள் பொதுவாக சக்தி போன்றவர்கள். ஆண்களுக்கு நிகரானவர்கள். ஏன் ஆண்களை விட வலிமையானவர்கள். ஆண்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை.
வாய்ப்பு கிடைத்தால் எந்தப் பெண்ணும் சாதிப்பார் என்பதற்கு சுமீத் கெளர் ஒரு நல்ல உதாரணம். நாடே இன்றுபாலியல் குற்றங்களால் தலை கவிழ்ந்து நிற்கும்போது சுமீத் கெளரின் சாதனை தலைநிமிர வைப்பதாக உள்ளது என்றார் பச்சன்.
Post a Comment