மதுரை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை பாராளுமன்றத்தில் வற்புறுத்துவேன் என்று திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.
மதுரையில் நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் 'பராசக்தி' திரைப்படத்தின் வைரவிழா நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், "வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் முதல் அனைத்து தேசபக்தர்களையும் நடிப்பாற்றலால் மக்கள் மன்றத்தில் நடமாட விட்டவர் சிவாஜி. அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. பெரிய தலைவர்கள் எல்லாம் ஜாதிய வளையத்துக்குள் தள்ளப்பட்டு முடக்கப்பட்டு விடுவர்.
ஆனால், அவற்றையெல்லாம் கடந்து தமிழகத்திலுள்ள ஒவ்வொரு ஆண், பெண் மனதிலும் குடியேறியவர் சிவாஜி. அவரது நடிப்பாற்றல் பற்றி பேசிக்கொண்டே போகலாம். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும், அந்த பாத்திரமாக மாறிக் காண்பித்தவர் சிவாஜி. அவரைப்போன்று இனி ஒரு நடிகர் பிறக்க முடியாது.
எத்தனை சாதனை நடிகர்கள் வந்தாலும், அவரது நடிப்பை பின்பற்றித்தான் வரமுடியும்.
கலையுலகின் மாமேதையான அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் நான் பேசுவதற்கு ஆதரவு கொடுக்க தமிழகத்தைச் சேர்ந்த பல எம்பிக்களை சந்தித்தேன். டெல்லியில் முக்கிய பதவிகளை வகிக்கும் பலரும், 'இந்த வேலை உனக்கு எதற்கு' என ஒதுங்கிக் கொண்டார்கள். அவர்கள் பெயர்களை வெளியிட விரும்பவில்லை. இதுதான் தமிழகத்தின் தலையெழுத்து.
உயர்ந்த மாமனிதன் உயிரோடு இல்லாவிட்டால், அவரது புகழை மறைத்து விடமுடியுமா? அந்த மாமேதைக்கு பாரத ரத்னா விருது வழங்கினால் இந்தியாவுக்கும் பெருமை, மத்திய அரசுக்கும் பெருமை. அந்த விருதை அவருக்கு வழங்கும்வரை மத்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன்," என்றார்.
Post a Comment