ஐ படத்தின் பட்ஜெட் விக்ரம் சொன்னது போல ரூ 150 கோடியெல்லாம் இல்லை... ரூ 100 கோடிக்கும் குறைவுதான், என்று இயக்குநர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் ஐ பட நாயகன் விக்ரம் அளித்த பேட்டியொன்றில், ஐ படத்தின் பட்ஜெட் ரூ 150 கோடி என்றும், இந்தியாவிலேயே பிரமாண்ட படம் இது என்றும் கூறியிருந்தார்.
இந்தப் படத்துக்கு ரூ 150 கோடி பட்ஜெட் என்றால், அதற்கான வியாபாரம் இருக்குமா... விக்ரம் சொல்வது உண்மைதானா... அவருக்கு இந்த அளவு ஓபனிங் உள்ளதா என்றெல்லாம் விமர்சனங்கள் கிளம்பின.
இந்த நிலையில், படத்தின் பட்ஜெட் குறித்து இயக்குநர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தனது ப்ளாக்கில் ஐ படம் குறித்து எழுதியுள்ள ஷங்கர், "ஐ படம் ரூ 100 கோடியை விட குறைவான பட்ஜெட்டில்தான் உருவாகிறது.
இந்தப் படத்தை சீனா, பாங்காக், ஜோத்பூர், கொடைக்கானல், பொள்ளாச்சி மற்றும் சென்னையில் எடுத்துள்ளோம். கிட்டத்தட்ட 3-ல் இரு பகுதி எடுத்துவிட்டோம். நான்கு பாடல்கள், மூன்று சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
அவதார், லார்ட் ஆப் தி ரிங்ஸ் படங்களில் பணியாற்றிய வீடா ஓர்க்ஷாப் நிறஙுவனத்தின் ரிச்சர்ட் டெய்லர், பீட்டர் ஜாக்சன் ஐ படத்தில் பணியாற்றுகின்றனர்.
கொடைக்கானலில் சீனா மாதிரி செட் போட்டு படமெடுப்பதாக வந்த செய்திகள் உண்மையல்ல. ஒரிஜினலாக சீனாவிலேயே படமாக்கியுள்ளோம். நாங்கள் விரும்பிய அனைத்து இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த சீனா அனுமதித்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment