முழுநேர இயக்குநராவது என்ற முடிவுக்கு வந்துவிட்ட நடிகை ரோஹிணி, தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவிடம் உதவி இயக்குநராக சேர்ந்திருக்கிறார்.
சிங்கீதம் சீனிவாசராவை இன்றைய தலைமுறைக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை. கமல் ஹாஸனின் அதிக வெற்றிப் படங்களின் இயக்குநர் இவர்தான்.
கமலின் முதல் தயாரிப்பான ராஜபார்வை, அடுத்த மெகா ஹிட் படமான அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், வசனங்களே இல்லாத பேசும் படம், மகளிர் மட்டும், லேடீஸ் ஒன்லி, சின்ன வாத்தியார், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ்.
இப்போது வெல்கம் ஒபாமா என்ற படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார். ராச்செல், சஞ்சய், ஊர்மிளா, நிரஞ்சனி என புதுங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
படத்தின் முதல் துணை இயக்குநராகப் பணியாற்றுகிறார் நடிகை ரோஹிணி. வசனமும் இவரே. இந்தப் படத்தை தமிழுக்கு மாற்றும் பொறுப்பும் ரோஹிணிக்குதான் தரப்பட்டுள்ளது.
ரோஹிணி ஏற்கெனவே தமிழில் அப்பாவின் மீசை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். ஆனாலும் சிங்கீதம் போன்ற ஜாம்பவானோடு பணியாற்றி முழுமையான அனுபவம் பெற உதவி இயக்குநராகியுள்ளார்.
Post a Comment